பல நாள் ஆனாலும் கெட்டுப்போகாத கிராமத்து ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு குழம்பு!

என்னதான் சுவையாக சமைத்தாலும் கிராமத்து சமையலுக்கு தனி மவுசுதான். கைகளில் மசாலா அரைத்து முறையான பக்குவத்தில் செய்யப்படும் இந்த கிராமத்து குழம்புகள் இரண்டு மூன்று நாள் ஆனாலும் கெட்டுப் போகாமல் அதே வாசத்தில் அதை சுவையில் இருக்கும். அந்த வகையில் கிராமத்து ஸ்பெஷல் கருவேப்பிலை பூண்டு குழம்பு எளிமையான முறையில் நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

ஒரு அகலமான கடாயில் மூன்று முதல் நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி கடுகு, 5 காய்ந்த வத்தல் சேர்த்து வதக்க வேண்டும். கடுகு நன்கு பொறிந்த பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் பொன்னிறமாக நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி தாராளமாக இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த நான்கு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
தக்காளி எண்ணெயோடு சேர்ந்து நன்கு வதங்கி மசிந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி தனியா தூள், இரண்டு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சை அளவு உள்ள புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். மசாலா கொதித்து வரும் நேரத்தில் ஒரு அகலமான கடாயில் கைப்பிடி அளவு கருவேப்பிலையை எண்ணெயில் நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் கைப்பிடி அளவு வெள்ளை பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் கலந்த நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும் ப்ரைடு சிக்கன்… இனி நம் வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க! ரெசிபி இதோ…

குழம்பு கொதித்து வரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் கருவேப்பிலை விழுதுகளை குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக சுவைக்கேற்ப உப்பு சரிபார்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பூண்டு கருவேப்பிலை குழம்பு தயார். இந்த குழம்பு ஒன்று செய்தால் போதும் ஒரு வாரத்திற்கு வேறு எந்த குலமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.