இந்த கிறிஸ்மஸ்க்கு வீட்டிலேயே கேக் செய்யலாம்…. ஈஸியான பிளம் கேக் ரெசிபி!

இந்த மாதம் முழுவதும் கேக் தாங்க ஹீரோ. வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் தலைவனாக இருப்பது கேக் வகைகள் தான். தமிழர்கள் பண்டிகையின் போது வீட்டில் பலகாரங்கள் செய்வது போல இந்த பண்டிகை நாட்களில் கேக் சாப்பிட்டு மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த முறை பேக்கரிகளின் கேக் வாங்காமல் வீட்டிலேயே பிளம் கேக் செய்வதற்கான எளிமையான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் நமக்கு தேவையான ஆரஞ்சு பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அளவு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவிற்கு ஆரஞ்சு ஜூஸ் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இதில் நமக்கு விருப்பமான நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

அதாவது முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், கருப்பு திராட்சை, பேரிச்சம்பழம் என நமக்கு விருப்பமான உலர் விதைகளை சேர்த்து நன்கு கலந்து இந்த கலவையை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடலாம்.

மறுநாள் ஒரு அகலமான பாத்திரத்தில் அரைக்கப் சக்கரை சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து கேரமல் பதத்திற்கு வர வேண்டும். அதை அடுத்த கால் கப் வெந்நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நான்கு தேக்கரண்டி பட்டர், 4 தேக்கரண்டி சன் ஃபிளவர் ரீபைண்ட் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் சர்க்கரை, ஒரு சிறிய துண்டு பட்டை, வாசனைக்காக ஏலக்காய் 2 சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சர்க்கரை மாவையும் முட்டையோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நாம் முதலில் தயார் செய்து வைத்திருக்கும் கேரமல், ஒரு நாள் இரவு முழுவதும் ஆரஞ்சு பழச்சாறில் ஊற வைத்திருக்கும் நட்ஸ் வகைகள், இரண்டு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து கைவிடாமல் கிளரும் பொழுது மட்டுமே சுவை அருமையாக இருக்கும்.

அடுத்ததாக ஒரு கப் மைதாவை சலித்து அதே பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து மீண்டும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக மாவு தயாராக மாறி உள்ளது.

செஃப் தாமு அப்பா ஸ்பெஷல் பழ மிளகாய் பன்னீர் வருவல்! சைவ பிரியர்களுக்கு கொண்டாட்டமான ரெசிபி…

இதை கேக் செய்யும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் மீது மீண்டும் அலங்காரத்திற்காக உலர்ந்த விதைகளை தூவிக்கொள்ள வேண்டும்.

இந்த கேக் மாவை ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கேக் தயார். ஓவன் இல்லாத பட்சத்தில் குக்கரில் அடியில் உப்பு அல்லது ஒரு பாத்திரம் வைத்து விட்டு அதன் மேல் நாம் தயார் செய்திருக்கும் மாவு கலவையை வைத்து விசில் போடாமல் 40 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும்.

இந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு கடைகளில் கேட் வாங்காமல் வீட்டிலேயே இது போல செய்து குழந்தைகளை அசத்தலாம்.