தாராளமாக பயிறு வகைகளை சேர்த்து புரோட்டின் சத்துக்கு குறைவே இல்லாத காரக்குழம்பு!

உடலில் புரோட்டின் சத்து அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் பாதாம், முந்திரி என விலை உயர்வான பொருட்களை மட்டுமே வாங்கி சாப்பிடாமல் வீட்டில் எளிமையாக கிடைக்கும் பொருட்களை வைத்துக் கூட உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகரிக்க முடியும். அந்த வகையில் இன்று நம் வீடுகளில் அடிக்கடி சமைக்கப்படும் பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, கருப்பு சுண்டல், மொச்சை பயிறு, பச்சை பட்டாணி என பயிர் வகைகளை வைத்து அருமையான காரக்குழம்பு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் கைப்பிடி அளவு பச்சை பயிறு தட்டைப்பயிறு மொச்சை பயிறு கருப்பு கொண்டை கடலை பச்சை பட்டாணி இவற்றை ஒன்றாக சேர்த்து தாராளமாக தண்ணீர் கலந்து நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

10 மணி நேரம் கழித்து ஊற வைத்த பயிர் வகைகளை ஒன்றாக குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி கடுகு அரை தேக்கரண்டி வெந்தயம் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கலாம்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி அளவு பெருங்காயம் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

முட்டை வைத்து ஒரே மாதிரியாக முட்டை குழம்பு செய்யாமல் சற்று வித்தியாசமாக ஆம்லெட் மிளகு குழம்பு!

இதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும். மசாலா கொதித்து வரும் நேரத்தில் எலுமிச்சை பழ அளவு புளிக்கரைசல் சேர்த்து கலந்து கொள்ளலாம். புளிக்கரைசல் சேர்த்த பிறகு குழம்பு ஒரு நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அதன் பிறகு நாம் வேக வைத்திருக்கும் பயிறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குழம்பை நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பயிறு குழம்பு தயார்.