ஆட்டுக்கால் பாயாவுடன் போட்டி போடும் சுவையில் சைவ பாயா! அதுவும் முருங்கக்காய் வைத்து…. ரெசிபி இதோ!

பாயா என்றாலே நம் மனதில் தோன்றுவது ஆட்டுக்கால் அசைவ பாயா தான். எழும்பை மிதமான தீயில் நீண்ட நேரம் வேகவைத்து தேங்காய் பால் சேர்த்து செய்யும் அந்த பாயாவின் சுவை தனி அமிர்தம் தான். இந்த முறை சைவப் பிரியர்களை மகிழ்விக்கும் விதமாக முருங்கைக்காய் வைத்து எளிமையான முறையில் அசைவத்தின் அதே சுவையில் பாயா செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் பாயா செய்வதற்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிய துண்டு பட்டை ஒன்று, ஏலக்காய் 2, கிராம்பு 4, அரை தேக்கரண்டி கசகசா, சிறிதளவு கல்பாசி, 10 முந்திரி பருப்பு, மூன்று பச்சை மிளகாய், அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை இரண்டு, இரண்டு வெங்காயம் பொடியாக நறுக்கியது, 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம். அடுத்ததாக நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கி மசிந்து வரும் நேரத்தில் பொடியாக நறுக்கிய மூன்று முருங்கை காய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்காய் சேர்த்த பிறகு ஐந்து நிமிடம் இதமான தீயில் வதக்கிக் கொள்ள வேண்டும்.

பலாப்பழம் வைத்து தித்திப்பான சுவையில் குளுகுளு ஐஸ்கிரீம் ரெசிபி! சுவை மாறாத ரெசிபி இதோ…

ஐந்து நிமிடம் கழித்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகள், தேவையான அளவு தண்ணீர் கலந்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும். இப்பொழுது குக்கரில் அழுத்தம் குறைந்த பிறகு திறந்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான சைவ முருங்கைக்காய் பாயா தயார். அசைவத்தின் அதே சுவையில் சிறப்பாகவே இந்த பாயா இருக்கும்.

இதை ஆப்பம், இடியாப்பம், தேங்காய் பால் சாதம், புலாவ், சப்பாத்தி என அனைத்திற்கும் சிறந்த சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்.