மாலை நேரங்களில் ரோட்டு கடைகளில் மட்டுமே கிடைக்கும் பட்டாணி சுண்டல் மசாலா!

மாலை நேரங்களில் ரோட்டு கடைகளில் மட்டுமே கிடைக்கும் சுவையான காளான், பாணி பூரி மசாலா இவற்றிற்கு இணையாக சத்து நிறைந்த ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றுதான் பட்டாணி சுண்டல் மசாலா. தெரு ஓரங்களில் 10 அடிக்கு முன்பாகவே இதன் வாசனை கமகமவென மயக்கும் விதத்தில் அமைந்திருக்கும். வாங்க இந்த முறை நம் வீட்டிலேயே பட்டாணி சுண்டல் மசாலா எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்…

முதலில் ஒரு கப் அளவிற்கு சுண்டல், பச்சை பட்டாணி, மஞ்சள் பட்டாணி என ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஆறு மணி நேரம் கழித்து ஒரு குக்கருக்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் கலந்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்க எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது மசாலா தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், இரண்டு தக்காளி பழம், ஒரு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, மூன்று பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு அரைத்து விழுதுகளாக எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சுவையான கொள்ளு கடையல்! மூன்று வேலையும் இது ஒன்றே போதும்….

இப்பொழுது ஒரு அகலமான கடாய் வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் அரைத்த விழுதுகளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு புதினா, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.

இப்பொழுது இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நாம் வேக வைத்திருக்கும் பட்டாணியை சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ரோட்டு கடை பட்டாணி சுண்டல் மசாலா தயார்.