பாஸ்தா குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு வகையாக இருந்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் அதை விரும்புவதில்லை. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் சாஸ் வகைகள் தான். ஆனால் வீட்டிலேயே வறுத்து அரைத்த மசாலாவை வைத்து காரசாரமான பாஸ்தா செய்து ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள். சுவையில் மெய்மறந்து விடுவீர்கள். அப்படி காரசாரமான செட்டிநாடு ஸ்டைல் பாஸ்தா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், கல்பாசி சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காய்ந்த வத்தல், ஐந்து முதல் 10 முந்திரி பருப்பு, ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக கைப்பிடி அளவு தேங்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து அதை சூட்டில் இந்த கலவையை கிளறி கொள்ள வேண்டும்.
வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் மசாலாக்களை அரைக்கும் பொழுது 5 பல் வெள்ளைப்பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் சதுர வடிவில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் சதுர வடிவில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பேபி கான் சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகளை வதக்கும்போது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
வதக்கிய இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதை கடாயில் மீண்டும் அரை தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் மூன்று காய்ந்த வத்தல், பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
தக்காளி பழம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்த்து கலந்து கொள்ளலாம். அடுத்ததாக நாம் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையை நீண்ட நேரம் கிளறி கொடுக்காமல் அப்படியே ஒரு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். அதன் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
இந்த கலவை நன்கு கொதித்ததும் வேக வைத்திருக்கும் பாஸ்தாவை அதில் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக அரை தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான வறுத்து அரைத்த செட்டிநாடு ஸ்டைல் மசாலா பாஸ்தா தயார்.