இந்தியன் ஸ்டைல் காரமான மசாலா மக்ரோனி பாஸ்தா! ஈஸி ரெசிபி இதோ…

குழந்தைகளுக்கு பலவிதமான ரெசிபிகள் மற்றும் ஸ்னாக்ஸ்கள் வீட்டில் செய்து கொடுத்தாலும் பெரிய ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கும் பாஸ்தா மீது தனி விருப்பம் தான். இந்த முறை வீட்டிலேயே எளிமையான முறையில் மக்ரோனி பாஸ்தா அதுவும் காரசாரமாக செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு பாத்திரத்தில் தாராளமாக தண்ணீர் சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் ஒரு கப் பாஸ்தாவை சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்தா சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பாஸ்தா முக்கால் பாகம் வெந்ததும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக தேவையான காய்கறிகளை நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். ஐந்து பல் வெள்ளை பூண்டு, இரண்டு பெரிய வெங்காயம், 3 தக்காளி பழம், இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் நேரத்தில் உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக பொருட்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ப ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம். மசாலா சேர்த்த பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து தொக்கு பதத்திற்கு வந்துவிடும்.

ஹோட்டல் ஸ்டைல் பிரியாணி கத்திரிக்காய் கிரேவி… வீட்டிலேயே செய்வதற்கான அசத்தல் ரெசிபி இதோ….

அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி தக்காளி சாஸ் , ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

மசாலா கொதித்து வரும் நேரத்தில் நாம் வேகவைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் பாஸ்தாவை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக இரண்டு தேக்கரண்டி வெண்ணெய், கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை தூவி கிளறி இறக்கினால் சுவையான பாஸ்தா தயார்.

Exit mobile version