வாழை இலையில் முந்திரி மிதக்க மிதக்க நெய் வாசத்துடன் கெட்டியான பருப்பு பாயாசம்! ரெசிபி இதோ…

விசேஷ வீடுகளில் பந்தியில் அறுசுவை விருந்தில் இறுதியாக இனிப்பிற்காக பாயாசம் பரிமாறப்படுவது வழக்கம். அப்படி பரிமாறப்படும் பருப்பு பாயாசத்தில் முந்திரி பருப்பு மிதக்க மிதக்க நெய் வாசத்துடன் அப்பளம் வைத்து வைத்து சாப்பிடும் பொழுது கிடைக்கும் திருப்தி தனி சுகம் தான். தித்திப்பான இந்த பருப்பு பாயாசத்தை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வதற்கான ரெசிபி இதோ…

இந்த பருப்பு பாயாசம் செய்வதற்கு 1/4 கிலோ பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 150 கிராம் ஜவ்வரிசியை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஊறவைத்து கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை அதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு வாசனை வரும் வரை பாசிப்பருப்பை நன்கு வறுத்துக் கொள்ளலாம்.

அதன் பின் இந்த நெய்யில் வறுத்த பருப்பை குக்கருக்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பருப்பு வெந்து வரும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் கால் கிலோ பாசிப்பருப்பிற்கு கால் கிலோ வெல்லம் சேர்த்துக் கொள்வது கணக்கு.

அதன்படி கால் கிலோ வெல்லத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கொதித்து கெட்டியாக வரவேண்டும். இப்பொழுது குக்கரில் அழுத்தம் குறைந்ததும் நன்கு வந்திருக்கும் பாசி பயிருடன் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

அதன் பின் நாம் ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியை இந்த கலவையுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது வாசனைக்காக ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவை மிதமான தீயில் நன்கு கொதித்து வரவேண்டும்.

மூன்று வெங்காயம் போதும்… சுவையான ஆனியன் மஞ்சூரியன் தயார்!

அந்த நேரத்தில் அரை கப் தேங்காய் துருவலை நன்கு பால் எடுத்து அந்த கெட்டியான பாலை பாயாசத்தில் சேர்க்கும் பொழுது சுவை மேலும் அருமையாக இருக்கும். தேங்காய் பால் சேர்த்து ஐந்து நிமிடம் பாயாசம் கொதித்தால் போதுமானது. இறுதியாக நெய்யியல் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை பழங்களை சேர்த்து இறக்கினால் சுவையான பருப்பு பாயாசம் தயார்.

Exit mobile version