வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயங்களில் எளிமையான சமையல் செய்வது வழக்கம். அதிலும் பருப்பு இருந்தால் கட்டி பருப்பு வைத்து அன்றைய சமையலை மிகவும் எளிமையாக முடித்து விடலாம். அப்படி அடிக்கடி வைக்கும் கட்டி பருப்பு சற்று வித்தியாசமாக பருப்பு குழம்பு போல் செய்து வைத்தால் சாதம் மட்டுமில்லாமல் இட்லி, தோசைக்கும் வைத்து சாப்பிடலாம். காய்கறி இல்லாமல் எளிமையான முறையில் பருப்பு குழம்பு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் ஒரு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இதனுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த தக்காளி ஒன்றை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தக்காளி நன்கு மசிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு குழைவாக வந்த பிறகு மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சத்தான மற்றும் சுவையான முளைவிட்ட பச்சை பயிறு கட்லெட்! ரெசிபி இதோ…
இதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு ஒரு கப் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர், ஒரு எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்து ஐந்து முதல் பத்து நிமிடம் கொதிக்க வைத்து கைப்பிடி அளவு மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பருப்பு குழம்பு தயார். பருப்பு குழம்பு இறக்கிய பிறகு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி சாதத்துடன் பரிமாறும் பொழுது அருமையான சுவையும் மனமும் இணைந்து இருக்கும்.