வட இந்திய உணவுகளில் தாபா ஸ்டைல் பன்னீருக்கு தனி மவுசுதான்! வீட்டிலேயும் தாபா ஸ்டைல் பன்னீர் செய்வதற்கான ரெசிபி இதோ…

புரோட்டின் சத்து நிறைந்த பன்னீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பன்னீர் வைத்து எப்பொழுதும் பிரியாணி, மசாலா, பன்னீர் 65 என செய்யாமல் சற்று வித்தியாசமாக பன்னீர் கிரேவி வைக்கும் பொழுது இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், சாதம், பரோட்டா என அனைத்திற்கும் சிறந்த பொருத்தமாக இருக்கும். அதுவும் அந்த கிரேவி தாபா ஸ்டைலில் காரசாரமாக இருக்கும் பொழுது சுவைக்கு பஞ்சமே இருக்காது. வாங்க தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…

இந்த பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கப் பன்னீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதை சதுர வடிவில் நறுக்கி அதன் மேல் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்துகொண்டு பத்து முதல் 15 நிமிடம் அப்படியே தனியாக ஊற வைக்க வேண்டும்.

15 நிமிடம் கழித்து ஒரு தோசை கல்லில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் ஊற வைத்திருக்கும் பன்னீரை அதில் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். அதிக நேரம் பொன்னிறமாக பன்னீரை வறுத்தெடுக்கும் பொழுது பன்னீர் சற்று கடினமாக மாற வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக அதை கையாளவும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை ஒதுக்கி கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் அரை கப் நன்கு அரைத்த தக்காளி விழுதுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது மூன்று முதல் நான்கு நல்ல பழுத்த தக்காளி பழங்களை அரைத்து அதன் விழுதுகளை கடாயில் சேர்த்து க் கொள்ளலாம்.

ஆடி வெள்ளிக்கு பாரம்பரியமான இனிப்பு வகை செய்ய ஆசையா! ஒரு முறை இந்த இனிப்பை ட்ரை பண்ணி பாருங்க…

மசாலாவுடன் இணைந்து தக்காளி நன்கு கலந்து ஒரு கொதி வர வேண்டும். இந்த நேரத்தில் கால் கப் கெட்டியான தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தயிரும் மசாலாவுடன் இணைந்து கெட்டி பதத்திற்கு வந்தவுடன் வாசனைக்காக கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கொள்ளலாம்.

கஸ்தூரி மேத்தி இல்லாத பட்சத்தில் கைப்பிடி அளவு புதினா மற்றும் மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பொன்னிறமாக பொறித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி தயார். பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கும் இந்த பன்னீர் கிரேவி நல்ல காரமாகவும் புளிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.