ரெஸ்டாரன்ட் சுவையில் பச்சை நிறம் சிறிதும் மாறாமல் அருமையான பாலக் பன்னீர் ரெசிபி!

வீட்டில் என்னதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில நேரங்களில் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கும் நிறம் மற்றும் வெளி தோற்றத்தை வீடுகளில் கொண்டு வர முடிவதில்லை. அப்படிப்பட்ட ரெசிபிகளில் ஒன்றுதான் பாலக் பன்னீர். பெரிய பெரிய கடைகளில் வாங்கும் பொழுது கீரையின் நிறம் சிறிதும் மாறாமல் பன்னீரின் நிறம் அதே சுவை மற்றும் வாசத்துடன் சிறப்பாக இருக்கும். ஆனால் வீடுகளில் செய்யும் பொழுது சில நேரங்களில் பக்குவம் தவறுவதும் உண்டு. இந்த முறை ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கும் அதே பக்குவத்தின் நம் வீட்டில் பாலக் பன்னீர் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில் ஒரு கட்டு பாலக்கீரை, இரண்டு பச்சை மிளகாய், ஐந்து முந்திரி சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும். குறிப்பாக இரண்டு நிமிடம் மட்டுமே. வேக வைக்க வேண்டும். கீரை வெந்து வரும் நேரத்தில் மூடி போடக்கூடாது.

இரண்டு நிமிடம் கழித்து வேகவைத்த கீரை பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பை இவற்றை குளிர்ந்த நீரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இதில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை மிகக் கொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி வதங்கும் நேரத்தில் உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கொளுத்தும் வெயிலுக்கு இடமாக குளுகுளுவென இருக்கும் தேங்காய்ப்பால் முருங்கைக்கீரை தண்ணீர் சாறு!

அடுத்ததாக நாம் அடைத்து வைத்திருக்கும் பாலக்கீரை விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். கீரை சேர்த்த பிறகு இரண்டு நிமிடம் இதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து நெய்யில் வறுத்தெடுத்த பன்னீரை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி, அரை கப் பிரஸ் கிரீம் இறுதியாக அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் தயார்.