பலாப்பழம் சாப்பிட்டு அதன் விதை மட்டும் உள்ளதா… பலாப்பழ கொட்டையை வைத்து அருமையான கேரளா ஸ்டைல் காரசாரமான குழம்பு ரெசிபி!

இப்பொழுது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது.. தெரு ஓரங்களில் இங்கு பார்த்தாலும் குவியல் குவியலாக பலாப்பழ வியாபாரம் நடந்து வருகிறது. முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்திற்கு எப்போதும் சிறப்பு தான். தேன் போன்ற தித்திப்பான சுவையில் பலாப்பழங்களின் சுளை இருந்தாலும் அதன் விதை கூட சமையலுக்கு பயன்படுத்த முடியும். பலாப்பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை கீழே போட்டு வீண்படுத்தாமல் அதை வைத்து அருமையான கேரளா ஸ்டைல் குழம்பு செய்வதற்கான ரெசிபி இதோ…

இந்த குழம்பு செய்வதற்கு தேவையான பலாக்கொட்டைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் தோள்களை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு சிறிய துண்டு இஞ்சி தட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் ஒரு கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், அரை கப் வெள்ளைப்பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு பாதியாக வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி பழம் நன்கு மசிந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பலாக்கொட்டைகளை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் இந்த கலவையை மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து நிமிடம் கழித்து பலாக்கொட்டை வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் மற்றொரு கடாயில் அரை கப் தேங்காய் துருவல், ஒரு தேக்கரண்டி தனியார், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

வதக்கிய இந்த பொருட்களின் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 முதல் 20 நிமிடத்தில் பலாக்கொட்டை நன்கு வெந்து மிருதுவாக மாறிவிடும்..

அதன் பின் அரைத்து வைத்திருக்கும் விழுதுவை கடாயில் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு கலந்து மீண்டும் மூடி போட்டு குழம்பை கொதிக்க விட வேண்டும்.

குழந்தைகளுக்கு பிடித்தமான பான்கேக்கை சத்து நிறைந்ததாக மாற்ற வேண்டுமா? கேழ்வரகு மாவு வைத்து அருமையான பான்கேக் செய்வதற்கான ரெசிபி இதோ…

மிதமான தீயில் குழம்பு கொதிக்கும் பொழுது பத்து நிமிடத்தில் கடாயின் ஓரங்களில் எண்ணைப் பிரிந்து சுவையான குழம்பு தயாராக மாறிவிடும். அடுத்ததாக மற்றொரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு, ஐந்து சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது, கைப்பிடி அளவு கருவேப்பிலை, காய்ந்த வத்தல் 2 சேர்த்து தாளித்து குழம்பின் உடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுவையான காரசாரமான பலாக்கொட்டை குழம்பு தயார். இந்த குழம்பு இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் கச்சிதமாக பொருந்தும்.