ஸ்நாக்ஸ்காக வாங்கிய பக்கோடா நிறைய உள்ளதா? அதை வைத்து அருமையான சிக்கன் குழம்பு சுவையில் பக்கோடா குழம்பு செய்யலாம்….

வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது அசைவம் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு திடீரென அந்த நாட்களில் அசைவம் சமைக்க முடியாது சூழ்நிலை ஏற்படலாம்.. அந்த நேரத்தில் அதே சுவையில் சைவத்தில் ஏதாவது குழம்பு செய்ய வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள். அப்பொழுது வீட்டில் ஸ்நாக்ஸ்க்கு வாங்கி வைத்த பக்கோடா வைத்து சிக்கன், மட்டன் குழம்பு சுவையில் அசத்தலான அசைவ குழம்பு செய்யலாம் வாங்க…..

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஏலக்காய் 2, பட்டை இரண்டு, பிரியாணி இலை இரண்டு, கிராம்பு இரண்டு, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, அண்ணாச்சி பூ ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம் நீளவாக்கில் நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி பழம் நன்கு மசிந்து குழைவாக மாறியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி சிக்கன் மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை செல்ல ஒரு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். அதன் பின் கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.

மிதமான தீயில் குழம்பு கொதிக்கும் நேரத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளலாம். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரின் அரை தேக்கரண்டி தேங்காய், 5 முந்திரி பருப்பு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

விருந்து அருமையாக இருக்க…. இளநீர் கொத்துக்கறி, தேங்காய்ப்பால் சாதம் ஒருமுறை இந்த ரெசிபியை பயன்படுத்தி சமைத்து பாருங்கள்?

குழம்பு கொதிக்கும் பொழுது இந்த தேங்காய் கரைசலை சேர்த்து கலந்து கொடுத்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடம் குழம்பு நன்கு கொதிக்க வேண்டும்.

அடுத்த 10 நிமிடத்தில் நாம் வைத்திருக்கும் பக்கோடாவை இதில் சேர்த்து ஒரு முறை கொதி வந்தால் போதுமானது. அடுப்பை அணைத்து விடலாம். பரிமாறுவதற்கு முன்பாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.