வெங்காயம், தக்காளி என எதுவும் சேர்க்காமல் எளிமையான பாகற்காய் தொக்கு! ரெசிபி இதோ….

பாகற்காய் மிகவும் பிடித்து சாப்பிடும் நண்பர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அதுவும் வெங்காயம், தக்காளி என எந்த பொருளும் சேர்க்காமல் எளிமையான முறையில் சுவையான பாகற்காய் தொக்கு செய்வதற்கான விளக்கம் இந்த தொகுப்பில் உள்ளது. ஒரு முறை இதுபோல பாகற்காய் தொக்கு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க..

முதலில் ஒரு மண்சட்டி அல்லது கடாய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலை பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் 5 பல் வெள்ளை பூண்டு, 2 பச்சை மிளகாய் கீறியது, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயின் கடாயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். எண்ணெயோடு சேர்த்து பாகற்காய் நன்கு வதக்க வேண்டும்.

குறைந்தது இரண்டு நிமிடம் வரை பாகற்காய் எண்ணெயோடு மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு தேவையான மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

மசாலாவின் வாசனை சென்றவுடன் எலுமிச்சை பழ அளவு புளிக்கரைசலை கட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம். மிதமான தீயில் இந்த கலவையை நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழந்தைகளை நொடியில் மகிழ்விக்க சுவையான சீஸ் தோசை! ரகசிய ரெசிபி இதோ…

கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து தொக்கு தயாராக வரும் நேரத்தில் இறுதியாக இரண்டு தேக்கரண்டி வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான பாகற்காய் தொக்கு தயார். இதில் கசப்பு, புளிப்பு, இனிப்பு என அனைத்து சுவைகளும் ஒருசேர பக்குவமாக கலந்திருப்பதால் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சிறப்பாக இருக்கும்.

இந்த பாகற்காய் தொக்கு வைத்து சாப்பிடும் பொழுது அப்பளம் அல்லது முட்டை வைத்து சாப்பிட்டால் மேலும் கூடுதல் சிறப்பாக இருக்கும். தக்காளி மற்றும் வெங்காயம் என எந்த காய்கறிகளும் பயன்படுத்தாமல் எளிமையான முறையில் நொடியில் இந்த பாகற்காய் தொக்கு தயார் செய்து விடலாம்.