ரெஸ்டாரண்டில் வழங்கப்படும் சில வகையான உணவுகள் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும். அதிலும் ஊறுகாயில் பல வகைகள் இருந்தாலும் காய்கறி ஊறுகாய் வெங்காய ஊறுகாய் என சில தனி சுவை ஊறுகாய் பொதுவாக ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும். இந்த ஊறுகாய் சாதத்தோடு மட்டுமல்லாமல் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடும் பொழுதும் அளவே இல்லாமல் சப்பாத்தி சாப்பிடலாம். அந்த அளவிற்கு நல்ல காரம் அளவான புளிப்பு சுவை நாவிலேயே நர்த்தனம் ஆடும். அந்த வகையில் இன்று ரெஸ்டாரன்ட் சுவையில் இருக்கும் வெங்காய ஊறுகாயை நம் வீட்டில் ஐந்தே நிமிடத்தில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
இந்த ஊறுகாய் செய்வதற்கு முதலில் மசாலா பொருட்களை நம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயம், ஒரு தேக்கரண்டி உப்பு நன்கு மையாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் மிகப் பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையில் நாம் வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த ஊறுகாய் கைகளைக் கொண்டு நன்கு கிளற வேண்டும். இதற்கென தனியாக கரண்டிகளை பயன்படுத்தாமல் கைகள் கொண்டு தயார் செய்யும் பொழுது சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
பத்து நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!
மசாலாவுடன் வெங்காயம் ஒரு சேர நன்கு கிளறியவுடன் இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் அல்லது இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சூடு படுத்தி சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஊறுகாயின் புளிப்புச் சுவைக்காக மூன்று தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
இறுதியாக ஒரு முறை உப்பு சரிபடுத்து கிளறி வைத்தால் இன்ஸ்டன்ட் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெங்காய ஊறுகாய் தயார். இந்த ஊறுகாய் செய்வதற்கு ஐந்து நிமிடமே அதிகமானது. ஆனால் இதன் சுவை ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத அளவிற்கு சிறப்பாக இருக்கும். சூடான சாதம், சப்பாத்தி இதனுடன் இந்த ஊறுகாய் வைத்து சாப்பிடலாம்.