கிராமங்களில் பொதுவாக குழம்பு வகைகள் சமைக்கும் பொழுது குறைந்தது இரண்டு நாட்களுக்கு வைத்து பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அப்படி இரண்டு நாட்கள் வைக்கும் பொழுது அந்த சமையல் கெட்டுப் போகாமலும் அதே சுவை மற்றும் மனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக பக்குவமாக பார்த்து சமைப்பார்கள். அப்படிப்பட்ட கைப்பக்குவ சமையலில் ஒன்றுதான் வத்தக் குழம்பு. அதுவும் சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு வைத்து சமைக்கும் வத்த குழம்பு சுவையோ சுவைதான். வாங்க எளிமையான முறையில் கிராமத்து கைப்பக்குவ வத்த குழம்பு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
ஒருஅகலமான கடாயில் ஒரு குழி கரண்டி போல நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த வத்த குழம்பு செய்வதற்கு நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கப் அளவிற்கு சின்ன வெங்காயம், 10 பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். ஒரு கப் என்பது இருபது முதல் 25 சின்ன வெங்காயம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வாசனைக்காக வதக்கிக் கொள்ளலாம்.
கண்ணாடி பதத்தில் வந்து வெங்காயம் வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், மூன்று தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும்வரை வதக்கி கொள்ளலாம். அடுத்ததாக நன்கு பழுத்த தக்காளி இரண்டு அல்லது மூன்று சேர்த்து நன்கு கைகளால் மசித்து கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் ஈசியான சாம்பார் சாதம்! ரெசிபி இதோ….
தக்காளி சேர்த்து பிறகு குழம்பிற்கு தேவையான அளவு உப்பு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் நெல்லிக்காய் அளவிற்கு ஊறவைத்த புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் கலந்து வத்தக்குழம்பு நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதித்து வரும் நேரத்தில் ஒரு சிறிய துண்டு வெள்ளம் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக மிதமான தீயில் வைத்து 10 முதல் 15 நிமிடம் குழம்பு நன்கு கொதித்து சுண்டிவர வேண்டும். இப்பொழுது சுவையான சின்ன வெங்காயம் வத்த குழம்பு தயார். இதை சூடான சாதத்திற்கு மட்டுமில்லாமல் தயிர் சாதத்திற்கும் சைடிஸ் ஆக வைத்து சாப்பிடலாம்.