ரம்ஜான் ஸ்பெஷல் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி! சுவை மாறாத ரெசிபி இதோ….

ரம்ஜான் நாட்களில் பகல் நேரம் முழுவதும் நோன்பு இருந்துவிட்டு மாலை நேரங்களில் பள்ளிவாசலில் வழங்கும் நோன்பு கஞ்சியை முதலில் சாப்பிடுவது அவர்களின் வழக்கமான விரத முறைகள் ஆகும். அந்த நோன்பு கஞ்சி அனைவருக்கும் பிடித்தமான சுவையில் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் சிறப்பாக இருக்கும். வாங்க இந்த முறை நோன்பு கஞ்சி நம் வீட்டிலேயே செய்து அனைவரும் சாப்பிடுவதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி நெய், இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு துண்டு பட்டை, நான்கு கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு பிரியாணி இலை, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக 10 சின்ன வெங்காயம், ஐந்து பல் வெள்ளைப்பூண்டு இவற்றை இடித்து குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் கோடியாக நறுக்கிய ஒரு தக்காளி, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு கப் கொத்துக்கறி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நமது விருப்பத்திற்கு ஏற்ப மட்டன் அல்லது சிக்கன் கொத்துக்கடியை சேர்த்துக் கொள்ளலாம். கொத்துக்கறி சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி கொடுத்த பிறகு ஊற வைத்திருக்கும் ஒரு கப் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு கப் அரிசிக்கு கால் கப் பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கப் அரிசிக்கு 6 கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஒரு சட்னி போதும்… இட்லி, தோசைக்கு மட்டுமில்லாமல் சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்!

மிதமான தீயில் ஆறு முதல் ஏழு விசில்கள் வரை தாராளமாக வைத்து வேக வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அரிசியுடன் சேர்த்து மட்டனும் நன்கு வெந்து சுவை கிடைக்கும். இறுதியாக குக்கரில் விசில் வந்து அழுத்தம் குறைந்த பின்பு குக்கரை திறந்து கெட்டியான ஒரு கப் தேங்காய் பால், நல்ல வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதில் கைப்பிடி அளவு மல்லி இலை, தேங்காய் துருவல் தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான பள்ளிவாசல் நோன்பு கஞ்சி நம் வீட்டிலேயே தயார் செய்து விடலாம்.