நம் வீடுகளில் அதிகப்படியான நேரம் இட்லி,தோசை செய்வது தான் வழக்கம். சில நேரங்களில் இந்த இட்லி மாவு இல்லாத பட்சத்தில் பொங்கல், சப்பாத்தி செய்யலாம். ஆனால் பத்தே நிமிடத்தில் உணவு தயார் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் பொழுது பெரும்பாலான வீடுகளில் உப்புமா செய்வது தான் முறை. ஆனால் இந்த உப்புமா பலருக்கு பிடிப்பதில்லை. அனைவருக்கும் பிடித்தமான முறையில் நொய் அரிசி உப்புமா ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள். மீண்டும் அதே உப்புமா வேண்டும் என கேட்கும் அளவிற்கு சுவை அமிர்தமாக இருக்கும். இந்த நொய் அரிசி உப்புமா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சேர்ந்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் களத்தில் வதங்கியதும் 10 பல் வெள்ளை பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு தக்காளி பழத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி நன்கு வதங்கி குழைவாக மாறியது அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
சமைக்கும் உணவை அமிர்தமாகவும், சுவையாகவும், சிறப்பாகவும் மாற்ற சில சமையல் கலை டிப்ஸ்!
இப்பொழுது அரை மணி நேரம் ஊற வைத்த நொய் அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் நொய் அரிசிக்கு மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடி விட வேண்டும்.
மிதமான தீயில் குறைந்தது மூன்று முதல் ஐந்து விசில்கள் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான நொய் அரிசி உப்புமா தயார். இந்த உப்புமாவிற்கு தேங்காய் சட்னி, இட்லி பொடி வைத்து சாப்பிடும் பொழுது சிறப்பாக இருக்கும்.