புசுபுசுன்னு உப்பலான பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா… அதுவும் வெங்காயம்,தக்காளி என எதுவும் இல்லாமல் பாம்பே பூரி மசாலா!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் செய்யும் பூரிக்கு அடிமைகள்தான். அதுவும் பூரிக்கு நம் வீடுகளில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலா மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அதிகப்படியாக காரம் மற்றும் மசாலாக்கள் ஏதும் சேர்க்காமல் எளிமையாக சமைக்கப்படும் இந்த மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் பொழுது உருளைக்கிழங்குடன் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்ப்பது வழக்கமான ஒன்று. . இந்த முறை வெங்காயம் மற்றும் தக்காளி என எதுவும் இல்லாமல் எளிமையான பூரி மசால் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

இந்த மசால் செய்வதற்கு முதலில் 300 கிராம் உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் ஒரே குக்கரில் சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இந்த 300 கிராம் உருளைக்கிழங்கு மசாலா நான்கு அல்லது ஐந்து நபர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

மூன்று முதல் நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும். குக்கரின் அழுத்தம் குறைந்ததும் உருளைக்கிழங்குகளை வெளியே எடுத்து தோள்களை நீக்கி நன்கு மசித்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி, அறை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து எண்ணெயோடு நன்கு வதக்க வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாவுடன் நன்கு கிளறி கொடுத்ததும் ஒரு டம்ளர் வெந்நீர் அல்லது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

மீல்மேக்கர் வைத்து இப்படி கூட கிரேவி சமைக்கலாமா? அட்டகாசமான மும்பை மலாய் சங்க்ஸ் ரெசிபி இதோ!

உருளைக்கிழங்கு தண்ணீருடன் கொதிக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவை குறைந்தது ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பாம்பே ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா தயார். இந்த மசாலா கெட்டியாக வேண்டும் என நினைப்பவர்கள் கடலை மாவு சிறிதளவு சேர்த்துக் கொண்டால் மசாலா கூடுதலாக கெட்டியாக இருக்கும்.
இந்த மசாலா செய்வதற்கு ஐந்து நிமிடங்களை போதுமானது மேலும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் என எந்த காய்கறிகளும் நறுக்க அவசியம் இல்லை..