கேக் என்றாலே இனிப்பு வகைகளில் ஒன்று. இதில் வெள்ளை சர்க்கரை அல்லது நாட்டுச்சக்கரை, வெல்லம் என ஏதாவது ஒன்று கலந்து இருக்கும் போது மட்டுமே சுவை இனிப்பாக இருக்கும். இந்த முறை இனிப்பிற்காக சர்க்கரைகள் ஏதும் சேர்க்காமல், மைதா சேர்க்காமல் முட்டை சேர்க்காமல் புதுமையான கேக் ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ.
நல்ல தித்திப்பான முழு பேரிச்சம்பழம் 10 எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் விதைப் பகுதிகளை நீக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நன்கு சூடான காட்சிய பால் ஒரு கப் அப்படியே சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தது அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக மாவு போல அரைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும். பால் எடுத்துக் கொண்ட கப்பிற்கு அதே அளவு அரை கப் உப்பு சேர்க்காத வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை 8 முதல் 10 நிமிடம் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் பால் எடுத்துக் கொண்ட அதே கப்பில் ஒரு கப் ராகி மாவு மற்றும் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து ஒரு சல்லடை கொண்டு சலித்து மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இதில் அரை தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா, ஒரு தேக்கரண்டி கொக்கோ பவுடர், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அனைத்து பொருட்களையும் சேர்த்த பிறகு மாவை மிதமான முறையில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாவு சற்று கெட்டியாக இருக்கும் பட்சத்தில் காய்ச்சி ஆற வைத்த பசும்பால் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மாவை நன்கு கலந்து கொடுத்தால் இறுதியாக கேக் மாவு தயாராக உள்ளது.
நாம் கேக் செய்யும் பாத்திரத்தின் அடியில் பட்டர் சீட் வைத்துவிட்டு இந்த மாவை அதன் மேல் சமமாக பரப்பிக் கொள்ள வேண்டும். இதன் மேல் சாக்கோ சிப்ஸ் நட்ஸ் என நமது விருப்பத்திற்கு ஏற்ப அலங்காரம் செய்து கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு அகலமான மற்றும் அடி கனமான கடாயில் உப்பு பரப்பி அதன் மேல் ஒரு ஸ்டான்ட் வைத்து பத்து நிமிடம் சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். பத்து நிமிடம் கழித்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் கேக் மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
இந்தியன் ஸ்டைல் காரமான மசாலா மக்ரோனி பாஸ்தா! ஈஸி ரெசிபி இதோ…
குறைந்தது 35 முதல் 40 நிமிடம் வரை நன்கு வேக வேண்டும். 40 நிமிடம் கழித்து ஒரு குச்சியை உள்ளே விட்டு எடுக்கும் பொழுது மாவு ஒட்டாமல் வந்துவிட்டால் கேக் தயாராக மாறி உள்ளது. அதை குறைந்தது ஒரு அரை மணி நேரம் அப்படியே ஆற வைக்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து ஒரு தட்டிற்கு மாற்றி பட்டர் ஷீட்டை கழட்டி விட்டு நமது விருப்பத்திற்கு ஏற்ப நறுக்கி எடுத்துக் கொண்டால் சுவையான கேக் தயார். இந்த கேக்கில் இனிப்பிற்கு பதிலாக சர்க்கரை ஏதும் சேர்க்காமல் பேரிச்சம்பழ இனிப்பை பயன்படுத்துவதால் மிகவும் சத்து நிறைந்ததாகவும் சுவையானதாகவும் இருக்கும்.