இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்யும் தொக்கு ரெசிபி!

இரும்பு சத்து குறைபாடு காரணமாக நம்மில் பலர் மாத்திரை, மருந்து என தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். முறையான சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த குறைபாடை எளிமையாக சரி செய்ய முடியும். அதுவும் மட்டன் ஈரலை வாரத்திற்கு இரு முறை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது இரும்பு சத்து கிடைத்து நல்ல கட்டுக்கோப்பான உடலை பெற முடியும். வாங்க இந்த முறை வறுத்து அரைத்த மசாலா வைத்து மட்டன் ஈரல் தொக்கு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் மசாலா தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு இரும்பு கடாயில் ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி சோம்பு, இரண்டு காய்ந்த வத்தல், இரண்டு காஷ்மீரி மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நல்ல வாசனை வரும்வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 10 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

வெங்காயத்துடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை நல்ல வதக்கி கொள்ள வேண்டும். இதில் 10 முந்திரி பருப்பு, மூன்று தக்காளி பழங்களை அரைத்து விழுதுகளாக கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிப்பழம் சேர்த்த பிறகு வதக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு புதினா இலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரை கிலோ அளவுள்ள சிக்கன் அல்லது மட்டன் ஈரல் சுத்தம் செய்து கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். ஈரல் சேர்த்த பிறகு நன்கு மசாலாவுடன் கலந்து கொடுக்க வேண்டும்.

மூன்று பொருள் போதும்…. ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் ஆரஞ்சு குல்பி இனி நம்ம வீட்டிலேயே செய்யலாம்….

அதன் பிறகு நான் முதலில் வறுத்து அரைத்த மசாலா இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். குறைந்தது 15 முதல் 20 நிமிடம் மிதமான தீயில் நன்கு வேக வைக்க வேண்டும். அப்பொழுதுதான் ஈரல் பஞ்சு போல நன்கு வெந்து சாப்பிடுவதற்கு சுவை சிறப்பாக இருக்கும்.

இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய், கைப்பிடி அளவு புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான ஈரல் தொக்கு தயார். சூடான சாதத்தில் வெறும் ஈரல் தொக்கு சேர்த்து அப்படியே பிசைந்து கூட சாப்பிடலாம் அல்லது ரசம் சாதம், சாம்பார் சாதம் என கலவை சாதங்களுக்கும் சைடிஷாக வைத்து சாப்பிடலாம்.