உடல் எடை அதிகரிக்க வேண்டும் என சிலர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தை அடைய முடியும். அந்த வகையில் சுவைக்கு பஞ்சமே இல்லாத மட்டன் கொழுப்பு வைத்து அருமையான தொக்கு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் 300 கிராம் அளவுள்ள ஆட்டு கொழுப்பு எடுக்க நன்கு கழுவி சுத்தம் செய்து சுறுசுறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் சேர்த்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய 15 முதல் 20 சின்ன வெங்காயம், ஐந்து காய்ந்த வத்தல் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் நன்கு வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி நன்கு வதங்கி மசிந்த பிறகு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.
அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து நன்கு மசாலா வாசனை செல்லும் வரை எண்ணையோடு வதக்கி கொள்ளலாம்.
இப்பொழுது நாம் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் கொழுப்பை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி கொடுத்து கொதிக்க விட வேண்டும்.
கொழுப்பு வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கறிக்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், கிராம்பு இரண்டு, பட்டை மூன்று துண்டு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி தனியா, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் மூன்று, ஒரு தேக்கரண்டி அரிசி, கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது வருத்த பொருட்களை சிறிது நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ளலாம். இந்த நேரத்தில் மட்டன் கொழுப்பு நன்கு வெந்து முறையான பக்குவத்தில் இருக்கும். இப்பொழுது நாம் வறுத்து தயார் செய்து வைத்திருக்கும் பொடியை இரண்டு தேக்கரண்டி மேலும் கூடுதலாக சேர்த்து கிளறிக்கொடுத்து ஒரு நிமிடம் வரை அப்படியே வேக வைக்க வேண்டும்.
10 நிமிடத்தில் தயாராகும் ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பச்சடி !
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மட்டன் கொழுப்பு கிரேவி தயார். சூடான சாதத்தில் இந்த கொழுப்பு கிரேவி வைத்து சாப்பிடும் பொழுது அமிர்தமாக இருக்கும்.