திருநெல்வேலி ஸ்பெஷல் மாப்பிள்ளை விருந்து உளுந்து சோறு , மட்டன் கறிக்குழம்பு! அசத்தலான ரெசிபி இதோ…

பாரம்பரியமான சமையல் முறை சில இடங்களில் மறைந்து வந்தாலும் பல இடங்களில் அதை பிரம்மாண்டமாக கொண்டாடி வருவது வழக்கம்தான். இப்படி திருநெல்வேலியில் மாப்பிள்ளை விருந்து ஸ்பெஷல் உணவான உளுந்தஞ்சோறு, மட்டன் கறிக்குழம்பு விருந்து என்றும் சிறப்புதான். இந்த உணவு முறை உடலுக்கு குளிர்ச்சி வைப்பது மட்டுமின்றி சத்துக்களையும் வழங்குகிறது. இந்த பாரம்பரிய உணவு முறையான உளுந்தஞ்சோறு, கறிக்குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த முறையில் உளுந்தஞ்சோறு செய்வதற்கு தொலி உளுந்து பயன்படுத்த வேண்டும். அதாவது மேல் தொலியுடன் இருக்கும் கருப்பு உளுந்து பயன்படுத்த வேண்டும். அரை கப் உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அடுத்து அதில் கால் தேக்கரண்டி வெந்தயம், கால் தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

வறுத்த இந்த பொருட்களை ஒரு குக்கரில் மாற்றிக்கொள்ள வேண்டும். அரைக்கப் உளுந்துக்கு ஒரு கப் அரிசி என்பது கணக்கு. அதன்படி ஒரு கப் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி மற்றும் உளுந்துக்கு ஏற்ற வகையில் குக்கரில் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு கப் தேங்காய் துருவல், ஐந்து பல் வெள்ளை பூண்டு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடி விசில் விட வேண்டும்.

மிதமான தீயில் இந்த சாதம் நான்கு முதல் ஐந்து விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின் குக்கரின் அழுத்தம் குறைந்ததும் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இலக்கினால் சுவையான உளுந்து சோறு தயார்.

அடுத்ததாக நம் மட்டன் கறி குழம்பு செய்ய வேண்டும். இதற்கு ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஒன்று, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பிரியாணி இலை இரண்டு, பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, ஐந்து முந்திரிப் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத நார்ச்சத்து நிறைந்த கருவேப்பிலை தொக்கு!

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி பழம், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த விழுதுகளை குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

அடுத்ததாக நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியார் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒன்றரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மட்டன் வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை முடிவிட வேண்டும்.

மிதமான தீயில் குறைந்தது ஐந்து முதல் ஏழு விசில்கள் வரும் வரை மட்டனை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி கசகசா சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் அழுத்தம் குறைந்தபின் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட வேண்டும். இப்பொழுது இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மட்டன் கறி குழம்பு தயார். இந்த உளுந்து சோறுக்கு மட்டன் கறி குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது சுவை மிக அருமையாகவும் உடலுக்கு சத்துக்கள் தரும் விதத்திலும் அமைந்திருக்கும்.