விசேஷ நாட்களில் நம் வீடுகளில் அசைவ விருந்து கண்டிப்பாக இருக்கும். அதிலும் மட்டனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று வீட்டு கைப்பக்குவத்தில் வீட்டில் உள்ள வறுத்தரைத்த மசாலாக்களை பயன்படுத்தி எளிமையான மற்றும் காரசாரமான மட்டன் குழம்பு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் அரை கிலோ மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மூன்று தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் விசில் வரும் அந்த நேரத்தில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஒரு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2 சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் அல்லது 15 முதல் 20 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளி வதங்கும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். இந்த மட்டன் குழம்பு செய்யும் பொழுது உருளைக்கிழங்கு தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு சேர்த்து மட்டன் குழம்பு செய்யும் பொழுது மட்டன் சுவை சற்று கூடுதல் ஆகவும் சாப்பிடும் பொழுது மிருதுவாகவும் இருக்கும். இரண்டு உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி சுத்தம் செய்து நடுத்தரமான அளவில் நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு சேர்த்த பிறகு வெங்காயம், தக்காளி உடன் நன்கு ஒரு முறை வதக்கிக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் நன்கு வேகவைத்த மட்டன் கறியை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நம் வீட்டில் தயார் செய்து வைத்திருக்கும் இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள், இரண்டு தேக்கரண்டி மட்டன் மசாலா தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை கிளறி கொடுக்க வேண்டும்.
இரத்த சோகையை சரி செய்து, முகத்தை பளபளப்பாக மாற்றும் நேந்திர பழம் வைத்து அருமையான கொழுக்கட்டை ரெசிபி!
இப்பொழுது மட்டன் வேக வைத்த தண்ணீரை கடாயில் சேர்த்து கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை நன்கு கலரி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
15 முதல் 20 நிமிடம் நன்கு கொதித்து வரும் பொழுது கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வீட்டு கைப்பக்குவத்தில் மட்டன் குழம்பு தயார். இந்த மட்டன் குழம்பு காரசாரமானதாக மட்டும் இல்லாமல் அதிகப்படியான மசாலாக்கள் சேர்க்காமல் வீட்டில் உள்ள மசாலாக்கள் வைத்து தயார் செய்வதால் சுவை கூடுதலாகவும் மீண்டும் மீண்டும் சாப்பிடும் ஆசையும் வரும்.