மட்டன் கறியுடன் பருப்பு, கத்தரிக்காய் சேர்த்து புரோட்டீனுக்கு பஞ்சமே இல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த தால்சா! அருமையான ரெசிபி இதோ!

அசைவ உணவு அனைவருக்கும் பிடித்த மட்டன் கறி வைத்து சற்று வித்தியாசமான முறையில் துவரம் பருப்பு, கத்தரிக்காய் சேர்த்து சுவையான தால்சா ஒரு முறை செய்து பாருங்கள். சூடான சாதம், நெய்ச்சோறு, புலாவ் என அனைத்திற்கும் இவை சிறப்பாக பொருந்தும். இந்த தால்சா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

இந்த தால்சா செய்வதற்கு அரை கப் துவரம் பருப்பு, கால் கப் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 250 கிராம் நன்கு கழுவி சுத்தம் செய்த மட்டன் கறி சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி உப்பு, தேவையான அளவு தண்ணீர், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி ஐந்து முதல் ஏழு விசில்கள் வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பிரியாணி இலை ஒன்று, ஸ்டார் பூ ஒன்று, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி சாம்பார் பவுடர், இரண்டு தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் மூன்று கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

கத்திரிக்காயை சேர்த்து வதக்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வேக வைத்திருக்கும் பருப்பு மற்றும் மட்டனை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் மேலும் கூடுதல் புளிப்பிற்காக இரண்டு மாங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

புரோட்டின் சத்து நிறைந்த மஸ்ரூம் வைத்து காரசாரமான கிரேவி மட்டும்தான் செய்ய முடியுமா? வாங்க அருமையான சட்னி செய்யலாம்!

இந்த கலவையை நன்கு கொதிக்க விட வேண்டும். மசாலாக்கள் நன்கு கொதித்து பச்சை வாசனை சென்றவுடன் சிறிய எலுமிச்சை பல அளவு புலி கரைசல் அரை கப் சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மட்டன் பருப்பு தால்சா தயார்.