மட்டன் கொத்துக்கறியுடன் போட்டி போடும் சுவையில் மஸ்ரூம் கொத்துக்கறி!

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா என அனைத்திற்கும் மட்டன் கொத்துக்கறி அருமையான பொருத்தமாக இருக்கும். ஆனால் சைவ பிரியர்கள் அதை விரும்புவதில்லை. அதற்கு பதிலாக அதே சுவையில் மஷ்ரூம் வைத்து அருமையான கொத்துக்கறி செய்து அசத்தலாம் வாங்க…

இந்த கொத்துக்கறி செய்வதற்கு மசாலாக்களை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும்.. அதற்காக ஒரு அகலமான கடாயில் ஒன்றரை தேக்கரண்டி மல்லி, பட்டை இரண்டு, கிராம்பு 3, ஏலக்காய் 2, அண்ணாச்சி பூ ஒன்று, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு சாதத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 10 முந்திரி சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து அதை சூட்டில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதன் பின் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து எண்ணையுடன் வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இந்த கொத்துக்கறி செய்வதற்கு வெங்காயத்தை மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

வெங்காயம் ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இதற்கு பதிலாக நன்கு பழுத்த தக்காளி பழங்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மிருதுவான பால் கொழுக்கட்டை!

தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், நாம் வறுத்து அரைத்த பொடி சேர்த்து மீண்டும் நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கொதிக்கும் நேரத்தில் இரண்டு கப் மஷ்ரூமை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.

மசாலா கலவை நன்கு கொதி வந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை இதில் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். மஸ்ரூம் சேர்த்தபின் ஐந்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மஷ்ரூம் கொத்துக்கறி தயார்.