காளான் வைத்து அசைவ உணவுடன் போட்டி போடும் விதத்தில் பலவிதமான ரெசிபிகள் செய்து அசத்த முடியும். இந்த முறை காளான் வைத்து வழக்கமாக செய்யும் பிரியாணியை விட சற்று வித்தியாசமாக சுவை கூடுதலாக இருக்கும் தொன்னை பிரியாணி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் தேவையான காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி கெட்டி தயிர் அல்லது ஒரு கப் கெட்டி தயிர், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், கால் தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு தேவையான சீரக சம்பா அரிசியை அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கழிவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு அகலமான குக்கரை எடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வந்ததும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் 10 சின்ன வெங்காயம், ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு சிறிய துண்டு லவங்கம், ஒரு ஏலக்காய், அரை தேக்கரண்டி மிளகு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரைத்த விழுதுகளை குக்கருடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே மிக்ஸி ஜாரில் கூடுதலாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, 5 பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து இந்த விழுதையும் அடுத்ததாக சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
இப்பொழுது நாம் சேர்த்த பொருட்கள் அனைத்தும் வெங்காயத்துடன் நன்கு வதங்கி எண்ணெய் தனியாக பிரிந்து வரும் நேரத்தில் நாம் மசாலா தடவி ஊற வைத்திருக்கும் காளானை சேர்த்துக் கொள்ளலாம்.
காளான் சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு கலந்து நன்கு கிளறி கொடுத்து மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். காளான் நன்கு வந்து குக்கரின் ஓரங்களில் எண்ணை புரிந்து வந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஐந்தே நிமிடத்தில் வறுத்து அரைத்த புதினா துவையல்! ரெசிபி இதோ…
ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து இறுதியாக மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு, இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடி விட வேண்டும்.
இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான காளான் தொன்னை பிரியாணி தயார்.