வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே உடலின் சூட்டை தணிக்க முடியும். இந்த முறை தேங்காய் பால் பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி மட்டும் இன்றி தேவையான ஊட்டச்சத்தையும் கொடுத்து நல்ல முறையில் பாதுகாக்கலாம். வாங்க தேங்காய்ப்பால் முருங்கைக்கீரை தண்ணீர் சாறு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் எளிமையான முறையில் பார்க்கலாம்.
முதலில் மூன்று கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சாப்பாட்டிற்காக நாம் வேக வைத்திருக்கும் அரிசியை ஒருமுறை கழுவி சுத்தம் செய்து அந்த தண்ணீரை கொட்டிவிட்டு இரண்டாம் முறை கழுவி சுத்தம் செய்து அந்த தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரிசி களைந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம், சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கை கீரை, இரண்டு காய்ந்த வத்தல், ஐந்து பல் வெள்ளை பூண்டு இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்ததாக அரை கப் தேங்காய் துருவலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து இரண்டு முறை பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரிசி கலந்த தண்ணீர் மற்றும் காய்கறிகள் கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் இரண்டாவது தேங்காய்ப்பால் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனாவின் ஸ்பெஷல் தேங்காய் பாகற்காய் ரெசிபி!
இப்பொழுது இந்த குழம்பு முறைப்படி பொங்கி வரும் நேரத்தில் முதலில் நாம் பிழிந்து வைத்திருக்கும் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதல் தேங்காய்ப்பால் சேர்க்கும் பொழுது அடுப்பை அணைத்து விடலாம். தேங்காய்ப்பால் ஊற்றிய பிறகு குழம்பு கொதிக்க கூடாது. இப்பொழுது சுவையான தேங்காய் பால் முருங்கைக்கீரை தண்ணீர் சாறு தயார். பார்ப்பதற்கு மோர் குழம்பு போல இருந்தாலும் சுவை அருமையாக இருக்கும்.
சூடான சாதத்திற்கு மட்டுமின்றி இந்த குழம்பு தனியாக சாப்பிடும் பொழுதும் சிறப்பாக இருக்கும். மேலும் இதில் தேங்காய் பால் முருங்கைக்கீரை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் கலந்திருப்பதால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி கொடுத்து வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவியாக இருக்கும்.