முருங்கை கீரை வைத்து சுவையான மற்றும் ஹெல்த்தியான நூடுல்ஸ் ரெசிபி!

முருங்கைக்கீரையில் உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் நிறைந்து உள்ளது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை முருங்கை கீரை எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து நல்ல வளர்ச்சி கிடைக்கும். இந்த முறை முருங்கைக்கீரை வைத்து வழக்கம் போல சமைக்காமல் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் ஹெல்த்தியான மற்றும் சுவையான நூடுல்ஸ் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், வடிகட்டிய முருங்கைக்கீரை சாறு சேர்த்து நன்கு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல வட்ட வடிவில் திரட்டி கொள்ள வேண்டும். அதன் பிறகு நீள நீளமாக நூடுல்ஸ் போல நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து வரும் நேரத்தில் நூடுல்ஸ் போல நறுக்கி வைத்திருக்கும் மாவை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்து விடலாம். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு முட்டையை உடைத்து சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரைத்தக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இட்லி, ஆப்பம், பூரி, இடியாப்பத்திற்கு வைத்து சாப்பிடக்கூடிய மசாலா குருமா! ரெசிபி இதோ…

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் நூடுல்ஸை கடாயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறக்குவதற்கு முன்பாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் முருங்கைக்கீரை நூடுல்ஸ் தயார்.

குழந்தைகள் வழக்கமாக சாப்பிடும் நூடுல்ஸை விட இந்த நூடுல்ஸ் ஹெல்தியாகவும் சுவை நிறைந்ததாகவும் இருப்பதால் தாராளமாக சாப்பிடலாம்.

Exit mobile version