முருங்கைக் கீரையில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. தினமும் முருங்கைக் கீரையை சூப், குழம்பு, துவரம் என வைத்து சாப்பிடும் பொழுது நம் உடலில் இருக்க தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைத்து வளர்ச்சியில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. முருங்கைக்கீரை பிடிக்காத என சொல்பவர்களுக்கு கூட முருங்கைக்கீரை வைத்து அருமையான பருப்பு சாதம் செய்து கொடுத்தால் சுவையில் மெய் மறந்து சாப்பிட்டு விடுவார்கள். அப்படி அருமையான முருங்கைக்கீரை சாதம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.
முருங்கைக்கீரை சாதம் செய்வதற்கு தேவையான அளவு முருங்கைக்கீரையை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் ஒரு கப் அரிசிக்கு அரை கப் துவரம் பருப்பு பயன்படுத்த வேண்டும். அரைமணி நேரத்திற்கு முன்பாகவே அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரின் அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொறிந்ததும் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கினால் எளிமையாக மசிந்து விடும். வெங்காயம் வதங்கும் பொழுது தேவைப்பட்டால் 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெள்ளைப்பூண்டு சேர்ப்பது அவரவர் விருப்பமே.
தக்காளி நன்கு மசிந்ததும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து எண்ணெயோடு நன்கு வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை சென்றதும் நாம் ஊற வைத்திருக்கும் எலுமிச்சை பல அளவு புளிக் கரைசலை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நம் ஊர வைத்து இருக்கும் ஒரு கப் அரிசிக்கு அரை கப் துவரம்பருப்பு, கால் கப் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒருமுறை கலந்து கொடுத்து தேவையான அளவு உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடிவிடலாம்.
காரசாரமான நல்லாம்பட்டி ஸ்பெஷல் சோயா வறுவல்!
குறைந்தது மூன்று முதல் நான்கு விசில்கள் வரும் வரை நன்கு வேகவைத்து எடுக்க வேண்டும். சாதத்துடன் சேர்ந்து முருங்கைக் கீரையும் நன்கு வெந்து மசிந்துவிடும். இறுதியாக ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய், அல்லது நெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தலித்து அதை குக்கரில் சேர்த்து கலந்து கொடுத்தால் சுவையான முருங்கைக்கீரை சாதம் தயார்.
இந்த சாதத்திற்கு உருளைக்கிழங்கு வறுவல் அல்லது அப்பளம் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.