எல்லா வீடுகளிலும் மூன்று வேளையும் தோசை கொடுத்தால் சிரித்த முகத்துடன் சாப்பிடும் ஒரு நபர் கண்டிப்பாக இருப்பார்கள். தோசைக்கு அவ்வளவு ரசிகர் கூட்டம் உள்ளது. எப்பொழுதும் ஒரே மாதிரியாக தோசை சாப்பிடாமல் சில நேரங்களில் முட்டை தோசை, பொடி தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மசால் தோசை, நெய் தோசை என தோசையில் பல வகைகள் அடுத்தடுத்து சாப்பிட ஆர்வத்தை தூண்டும் விதத்தில் வித்தியாசமான தோசை வகைகளும் உள்ளது. இந்த வகையில் கர்நாடகா ஸ்பெஷல் முல்பாகல் தோசையை நாம் ஒரு முறையாவது சுவை பார்த்து இருக்க வேண்டும். இந்த தோசை செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த தோசை செய்வதற்கு முதலில் மாவு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து, கால் கப் அவல், ஒரு தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி கடலை பருப்பு சேர்த்து இரண்டு மூன்று முறை கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளலாம். இதை குறைந்தது மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை தோச மாவு பதத்திற்கு நைசாக அரைத்து கொள்ள வேண்டும். அனைத்து மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது இந்த மாவு புளித்து வருவதற்காக ஓரமாக வைத்துவிட வேண்டும்.
அந்த நேரத்தில் தோசைக்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, மூன்று பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக நீளவாக்கில் கொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரை டம்ளர் தண்ணீர், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
ஐந்து நிமிடத்தில் தண்ணீர் நன்கு வற்றி வெங்காயம் நன்கு வெந்து இருக்கும். இந்த நேரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு மூன்றை நன்கு தோல் நீக்கி மசித்து கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது மசாலா தயாராக மாறிவிட்டது.
அரைத்து வைத்திருக்கும் தோசை மாவு குறைந்தது 5 மணி நேரம் புளிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தி நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை தயார் செய்து தோசை சுட வேண்டும்.
தோசையின் மேல் ஒரு தேக்கரண்டி இட்லி மிளகாய் தூள் பரவலாக தூவ வேண்டும். இதற்குமேல் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு மேலே நான் தயார் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை தோசையில் முழுவதும் வட்ட வடிவில் நன்கு பரப்பிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு புறம் மட்டுமே தோசையை மூடி போட்டு வேகவைத்து தட்டிற்கு மாற்றினால் சுவையான முல்பாகல் தோசை தயார். இந்த தோசை சாப்பிடுவதற்கு தனியாக சட்னி, சாம்பார் என எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தோசையிலேயே காரம் மசாலா இருப்பதால் அப்படியே சாப்பிட்டு விடலாம்.