கேரளா மாநிலத்தில் சின்ன வெங்காயம் அதிகமாக பயன்படுத்தி வைக்கும் வெங்காயத் தீயல் மிகவும் பிரபலமானது. ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத இந்த குழம்பு பலரின் விருப்பமான குழம்புகளில் ஒன்றாகும். அதே சுவையில் முட்டை வைத்து அருமையான தீயல் ரெசிபி ஒன்று செய்யலாம்..
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி தனியா, பத்து பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, காரத்திற்கு ஏற்ப சாய்ந்த வத்தல் மூன்று முதல் ஐந்து, ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.
தேங்காய் பொன்னிறமாக மாறும் நேரத்தில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வாசனை செல்லும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
இப்பொழுது வதக்கிய பொருட்களின் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, நீளவாக்கில் நறுக்கிய ஐந்து வெள்ளை பூண்டு, நீளவாக்கில் நறுக்கிய சிறிய துண்டு இஞ்சி சேர்த்து முதலில் வதக்க வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு கப் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதாவது 10 முதல் 15 சிறிய வெங்காயம் வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இந்த இடத்தில் எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல், தேவையான அளவு தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொள்ளலாம்.
மிதமான தீயில் இந்த கலவையை 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து குழம்பு கெட்டியாக மாறி இருக்கும். அந்த நேரத்தில் நாம் வேகவைத்து வைத்திருக்கும் முட்டையை இரண்டாக கீரி குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான முட்டைதீயல்தயார். இந்த தியலை சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அமிர்தமாக இருக்கும். மேலும் சைடிஷ் என தனியாக ஏதும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.