வெயில் அதிகரிக்க உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்பதற்காக பலர் மோர், இளநீர் போன்ற நீர் அகரங்களை தனது உணவுடன் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் மோர் குழம்பு பலருக்கும் பிடித்த எளிமையான குழம்பு வகைகளில் ஒன்று. இந்த குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது நமக்கு அஜீரண கோளாறு நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். அதிகப்படியான மசாலாக்கள் எதுவும் சேர்க்காமல் எளிமையான முறையில் எளிதில் ஜீரண சக்தி ஆக கூடிய தன்மையில் இந்த மோர் குழம்பு இருக்கும். அதுவும் இந்த மோர் குழம்பை வாழைப்பூ வைத்து செய்யும் பொழுது சுவை அட்டகாசமாக இருக்கும். வாழைப்பூ மோர் குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த மோர் குழம்பு செய்வதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், மூன்று சிறிய துண்டு பட்டை, இரண்டு துண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு காய்ந்த வத்தல், ஒரு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இதில் சின்ன வெங்காயம் நான்கு அல்லது ஐந்து சேர்த்துக் கொண்டால் போதுமானது.. வதக்கி இந்த பொருட்கள் நன்கு சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதே கடாயில் எண்ணெய் சேர்க்காமல் நம் சுத்தம் செய்து வைத்திருக்கும் வாழைப்பூவை சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது வாழைப்பூ ஒரு கைப்பிடி அளவு அல்லது அதற்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
வாழைப்பூவை ஒன்று முதல் இரண்டு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் வாழைப்பூ நன்கு வெந்துவிடும்.
நான் முதலில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் வேக வைத்திருக்கும் வாழைப்பூ, ஒரு கப் துருவிய தேங்காய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த வாழைப்பூ விழுதுகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். இதனுடன் மூன்று தேக்கரண்டி கடலை மாவு, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளலாம். ஒரு அகலமான கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நம் உருண்டையாக பிடித்து வைத்திருக்கும் வாழைப்பூ உருண்டைகளை பொறுத்தெடுக்க வேண்டும்.
இப்பொழுது வாழைப்பூ கோலா உருண்டை தயார். அடுத்ததாக எளிமையான மோர்க்குழம்பு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி அரிசி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து நன்கு ஊறி இருக்கும் அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இவற்றுடன் இரண்டு சில்லு தேங்காய், அரை தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு சிறிய கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதுவை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து ஒரு நிமிடம் எண்ணெயில் பிரட்ட வேண்டும்.
அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும்.
மசாலா நன்கு கொதித்ததும் ஒரு கப் தயிர் சேர்த்துக் கொள்ளலாம் . தயிர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிவரும் நேரத்தில் நாம் பொறித்து வைத்திருக்கும் வாழைப்பூ கோலா உருண்டைகளை மோர் குழம்பு உள்ளே சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மோர் குழம்பு ஒரு நிமிடம் கொதித்தால் போதுமானது. சுவையான வாழைப்பூ மோர் குழம்பு தயார்.