லஞ்ச் பாக்ஸ்க்கு லெமன் சாதத்திற்கு பதிலாக ஒரு முறை இந்த காரசாரமான மசாலா லெமன் சாதம் ட்ரை பண்ணுங்க..

பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விடும்பொழுது அதிகப்படியாக வெரைட்டி சாதங்கள் கொடுத்து விடுவது வழக்கமான ஒன்று. எப்போதும் ஒரே போல லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புதினா சாதம் என கொடுத்து விடாமல் சற்று வித்தியாசமாக லெமன் வைத்து மசாலா லெமன் சாதம் செய்து கொடுத்து பாருங்கள். இந்த மசாலா லெமன் சாதத்திற்கு அதிகப்படியாக சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது. வாங்க எளிமையான முறையில் மசாலா லெமன் சாதம் வீட்டிலேயே செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு அகலமான கடாயில் தாராளமாக இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை, 10 முந்திரி பருப்பு சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வந்ததும் காரத்திற்கு ஏற்ப 5 காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் மிக்ஸி ஜாரில் தேவையான மசாலாவை அரைத்துக் கொள்ளலாம்.

இதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை இலைகள், கால் கப் தேங்காய் துருவல், 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்த மசாலாவை கடாயில் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு எலுமிச்சை பழத்தை புளிந்து சாறு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து அந்த கலவையை கடாயில் சேர்க்க வேண்டும். இப்பொழுது நாம் சேர்த்து அனைத்து பொருட்களையும் கடாயில் ஒரு சேர வரும் வரை கிளறி கொடுத்துக் கொள்ள வேண்டும்.

சிக்கன் ப்ரைட் ரைஸ் உடன் போட்டி போடும் அதே சுவையில் உருளைக்கிழங்கு ப்ரைட் ரைஸ்!

இந்த நேரத்தில் தேவையான அளவு சாதத்தை கலந்து கொள்ளலாம். இறுதியாக தேவைப்பட்டால் உப்பு ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளலாம். கைப்பிடி அளவு கொத்தமல்லி இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மசாலா லெமன் சாதம் தயார். இந்த சாதத்தில் தேவையான அளவு உப்பு மற்றும் காரம் இருப்பதால் சைட் டிஷ் ஏதும் இல்லாமல் அப்படியே சாப்பிட்டு விடலாம்.

எப்போதும் வெறும் லெமன் சாதம் சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்த மசாலா லெமன் சாதம் சற்று வித்தியாசமாகவும் காரசாரமாகவும் சுவையாகவும் இருக்கும்.