கல்யாண வீடுகளில் பந்திகளில் என்னதான் விதவிதமாய் உணவு வகைகள் பரிமாறினாலும் பலரும் நாடுவது அதில் பரிமாறப்படும் ஊறுகாயை தான். காரணம் இதில் வைக்கப்படும் இன்ஸ்டன்ட் ஊறுகாய் சுவை நிறைந்ததாக இருக்கும். இந்த சுவையான ஊறுகாயை சாப்பிட கல்யாண வீடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதே ஊறுகாயை நாமே வீட்டில் செய்து ருசித்து சாப்பிடலாம். இந்த உடனடி மாங்காய் ஊறுகாயை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
அடடே! எச்சில் ஊறச் செய்யும் எலுமிச்சை ஊறுகாய்.. அனைத்து சாதத்திற்கும் இது ஒன்று போதும்!
இந்த மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு முதலில் ஒரு கிலோ அளவு மாங்காயை நன்கு கழுவி ஈரப்பதம் ஏதும் இல்லாதவாறு துடைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மாங்காய் கல்யாண வீடுகளில் நல்ல பொடி பொடியாக நறுக்கப்பட்டிருக்கும் அதே போல நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் இரண்டு ஸ்பூன் கடுகு இரண்டையும் நன்கு சிவக்க பொறிக்க விடுங்கள். இவை இரண்டும் சிவந்து பொரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து வேறு தட்டிற்கு மாற்றி ஆற வைத்து விடுங்கள்.
வெந்தயம், கடுகு இரண்டும் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நறுக்கிய மாங்காயில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கேற்ப மூன்றிலிருந்து நான்கு மேஜை கரண்டி அளவு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். ஊறுகாய்க்காக அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் மற்றும் கடுகு பொடியையும் இதனுடன் சேர்த்து ஈரம் ஏதும் இல்லாத கரண்டியை கொண்டு நன்கு கிளறி கொள்ளவும்.
இதனை தாளிப்பதற்கு ஒரு கடாயில் மூன்று மேசை கரண்டி அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். தாளித்ததை ஊறுகாயின் மேல் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
தாளித்த இந்த ஊறுகாயை குறைந்தது 2 மணி நேரம் வெயிலில் வைத்து பிறகு இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம். இதே ஊறுகாயை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க விரும்பினால் மூன்று நாட்கள் தொடர்ந்து வெயிலில் வைத்து எடுத்து பயன்படுத்தலாம்.
அவ்வளவுதான் கல்யாண பந்திகளில் பரிமாறப்படும் சுவையான மாங்காய் ஊறுகாய் தயார்!