சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த காய் வைத்து அருமையான ரசம் ரெசிபி!

பொதுவாக ரசம் சாப்பிடும் பொழுது எளிதில் ஜீரணம் அடைந்து உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். ரசத்தில் பலவகையான ரெசிபிகள் உள்ளது. இதில் இந்த முறை சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் மாங்காய் வைத்து நல்ல காரசாரமான ரசம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மாங்காய் ரசம் செய்வது விளக்கம் இதோ…

முதலில் நல்ல பெரிய அளவுள்ள மாங்காய் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் வெளிப்பக்கம் உள்ள தோள்களை நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இப்போது ஒரு குக்கரில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மாங்காய் துண்டுகள், காரத்திற்கு ஏற்ப மூன்று அல்லது ஐந்து பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் அரை மணி நேரம் ஊற வைத்த கால் கப் துவரம்பருப்பு, ஒரு டம்ளர் தண்ணீர், அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும். ஐந்து விசில்கள் வந்த பிறகு குக்கரில் அழுத்தம் குறைந்ததும் குக்கரை திறந்து வேக வைத்த பருப்பு மற்றும் மாங்காய்களை மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள், மூன்று சாய்ந்த வத்தல், இரண்டு கொத்து கருவேப்பிலை, 5 பல் வெள்ளைப் பூண்டை தட்டி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

சாதாரண உணவையும் விருந்து போல மாற்றும் எளிமையான சில சமையல் டிப்ஸ்கள்!

இப்பொழுது கருவேப்பிலை நன்கு பொரிந்து வந்ததும் ஒன்றை தேக்கரண்டி ரசப்பொடி சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்ததாக நாம் வேக வைத்திருக்கும் பருப்பு மற்றும் மாங்காய் கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தாராளமாக தண்ணீர் சேர்த்து தேவையான அளவு கல் உப்பு கலந்து கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்கு ஒன்று கூடி ஒரு கொதி வரும் நேரத்தில் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான மாங்காய் ரசம் தயார். சூடான சாதத்தில் தாராளமாக இந்த ரசம் சேர்த்து அப்பளம் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Exit mobile version