வேலைக்கு செல்பவர்கள் முதல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரை தினமும் விதவிதமான உணவு வகைகளை லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். அதிலும் தக்காளி சாதம் அனைவருக்கும் பிடித்தமான ரெசிபியில் ஒன்று. இந்த தக்காளி சாதத்தில் வெங்காயம் பூண்டு என எதுவும் சேர்க்காமல் வித்தியாசமான முறையில் அசத்தலான சுவையில் 10 நிமிடத்தில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுந்து, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
அடுத்ததாக இரண்டு காய்ந்த வத்தல், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். கருவேப்பிலை நன்கு பொரிந்ததும் ஐந்து முதல் பத்து முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ளலாம். முந்திரிப்பருப்பு பொன்னிறமாக மாறியதும் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த தக்காளி சாதம் செய்வதற்கு தக்காளியை பொடியாக நறுக்கி பயன்படுத்தாமல் அரைத்து பயன்படுத்த வேண்டும். அதாவது நன்கு பழுத்த நான்கு தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த விழுதுகளை வைத்து நம் தக்காளி சாதம் தயார் செய்ய போகிறோம்.
அதன்படி பெருங்காயத்தூள் சேர்த்த அடுத்த நிமிடம் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கறி மசாலா தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
மிதமான தீயில் இந்த கலவையை 8 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து கடாயை திறந்து பார்க்கும் பொழுது ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் தற்பொழுது தக்காளி தொக்கு தயார். இப்பொழுது தேவையான தக்காளி தொக்கு ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
இட்லிக்கு தாராளமாக வைத்து சாப்பிடக்கூடிய கிராமத்து ஸ்டைல் தக்காளி சாம்பார்!
இறுதியாக நாம் வடித்து ஆற வைத்திருக்கும் உதிரியான சாதத்தை இதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு முறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான தக்காளி சாதம் தயார். மீதம் இருக்கும் தொக்கை நாம் இட்லி ,தோசைக்கு வைத்து சாப்பிட்டு கொள்ளலாம்.
இந்த தக்காளி சாதம் செய்வதற்கு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் என எதுவும் தேவையில்லை. எளிமையான முறையில் பத்தே நிமிடத்தில் அருமையான தக்காளி சாதம் தயார்.