உடலுக்கு நன்மை தரக்கூடிய காய்கறிகளில் ஒன்று கேரட். விட்டமின், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் என உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளது. கேரட்டை அதிகமாக உணவில் சேர்த்தால் சருமத்திற்கும் மிகவும் நல்லது. கேரட் இதயத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளில் ஒன்று. மேலும் உடல் எடையை குறைத்திட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க கேரட் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த கேரட் வைத்து எப்படி சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கேரட் சாதம் செய்யலாம் என பார்க்கலாம்.
சுலபமா செய்யலாம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு சூப்பரான கொத்தமல்லி சாதம்!
கேரட் சாதம் செய்வதற்கு முதலில் நான்கு பச்சை மிளகாய், எட்டு பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் பாஸ்மதி அரிசியை குழைந்து விடாமல் பதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு பிரியாணி இலை, இரண்டு கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை வதக்கும் பொழுதே அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போல் போகும் வரை வதக்கவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வந்ததும் இரண்டு கேரட்டை துருவி அதனை இப்பொழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது வடித்து வைத்த சாதத்தை ஆற வைத்து, அதனை இந்த கேரட்டோடு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம்.
குழந்தைகளுக்கு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி… காய்கறிகள் சேர்த்த வெஜிடபிள் புலாவ்!
அவ்வளவுதான் சுவையான கேரட் சாதம் தயாராகி விட்டது!