தென்னிந்திய உணவுகளில் உளுந்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. மருத்துவ குணம் நிறைந்த இந்த உளுந்து எலும்புகளை பலப்படுத்த வல்லது. இதனால் அடிக்கடி நம் உணவில் உளுந்து எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் உளுந்து வைத்து செய்யும் சாதம் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. ஆனால் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து முறையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக உளுந்து வைத்து அருமையான வறுத்தரை இந்த மசாலா சாதம் செய்யலாம் வாங்க. இந்த சாதம் சற்று காரசாரமாக உதிரி உதிரியாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உளுந்து வறுத்து அரைத்த மசாலா சாதம் செய்வதற்கான ரெசிபி இதோ…
அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி, ஐந்து தேக்கரண்டி தோல் நீக்காத உளுந்து அதாவது கருப்பு உளுந்து, 3 காய்ந்த வத்தல், இரண்டு காஷ்மீரி வத்தல் சேர்த்துக் கொள்ளலாம். காஷ்மீர் வத்தல் சேர்ப்பது உணவின் நிறத்திற்காக மட்டுமே.
இந்த வத்தல் இல்லாத பட்சத்தில் சாதாரண வத்தல் பாடத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக கைபிடி அளவு வேர்க்கடலை, இரண்டு துண்டு தேங்காய் பொடியாக நறுக்கியது சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது நாம் சேர்த்த உளுந்துவின் நிறம் மாறும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்ந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இதை அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் சாபத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு எண்ணெயோடு சேர்த்து பொடியை கிளற வேண்டும்.
இரண்டு நிமிடம் நன்கு வறுத்ததும் தேவையான அளவு சாதம் சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளற வேண்டும். சாதம் நன்கு உதிரியாகவும், சூடு தணிந்து இருந்தால் கிளறுவதற்கு ஏற்றார் போல் இருக்கும். இதனுடன் மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்து இறக்கினால் சுவையான உளுந்து வறுத்து அரைத்த மசாலா சாதம் தயார். சாதம் ஐந்து முதல் பத்து நிமிடத்தில் தயார் செய்ய முடியும் என்பதால் லஞ்ச் பாக்ஸ் இருக்கு கொடுத்து விடலாம். உளுந்து சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட இந்த சுவையில் மயங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.