மட்டன் வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்தாலும் அதில் ஒன்றான குடல் வைத்து காரசாரமாக வறுத்து அரைத்த மசாலா வைத்து தயார் செய்யப்படும் குடல் கறி கிரேவி பலருக்கு பிடித்தமான ஒன்று. இது இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும். வாங்க எளிமையான முறையில் பக்குவமான குடல் கறி கிரேவி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் குடல் கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, தேவையான அளவு தண்ணீர் கலந்து ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், இரண்டு காய்ந்த வத்தல், ஒரு துண்டு பட்டை, 3 கிராம்பு, ஒரு ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது நாம் வருத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது ஒரு குழி கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி வெந்தயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
அடுத்து 10 முதல் 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டுவின் பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய வத்த குழம்பு! கை பக்குவம் மாறாத ரெசிபி இதோ…
தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் நாம் வேகவைத்த குடல் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த குடலை அதன் தண்ணீரோடு சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக நாம் முதலில் வறுத்து அரைத்த மசாலாவையும் இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
மசாலா நன்கு கொதித்து கெட்டி பதத்திற்கு வரும்பொழுது அடுப்பை அணைத்து விடலாம். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான குடல் கறி தயார். இந்த ஒரு குடல் கறி போதும் அருமையான மட்டன் விருந்து திருப்தியாக முடியும்.