சாப்பிடும்போது வேண்டாம் என ஒதுக்கும் குடைமிளகாய் வைத்து சட்னி ரெசிபி!

பிரைட் ரைஸ், பன்னீர் டிக்கா என குடைமிளகாய் சேர்த்து பல ரெசிபிகள் ரெசிபிகள் செய்தாலும் அதை வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. காரம் குறைவாக இருக்கும் இந்த குடைமிளகாய் உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்களை தரக்கூடியது. ஆனால் தனியாக அந்த தாயை சமைத்து சாப்பிட பொதுவாக யாரும் விரும்புவதில்லை. இந்த மாதிரி நேரங்களில் குடைமிளகாய் வைத்து அருமையான சட்னி ஒன்று செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு குடமிளகாயை நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி உள்ளே இருக்கும் விதைப்பகுதிகளை வெளியே எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.. அடுத்து ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய் மற்றும் இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து வதக்க வேண்டும்.

காரம் அதிகமாக தேவைப்பட்டால் கூடுதலாக பச்சை மிளகாய் அல்லது காய்ந்த வத்தல் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம், 10 பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
பூண்டு பாதியாக வதங்கியதும் 10 முதல் 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி பழம் பாதியாக மசிந்ததும் கைப்பிடி அளவு தேங்காய் துருவல், கைப்பிடி அளவு மல்லி இலை, அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

அட இதுல கூட துவையல் செய்யலாமா? பலரை வாயை பிளக்க வைக்கும் கத்திரிக்காய் துவையல் ரெசிபி!

இப்பொழுது வதக்கிய பொருட்களை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். மீண்டும் அதே கடாயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் குடமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடம் குடைமிளகாயை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் வதக்கிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து வையாக அரைக்க வேண்டும். அரைக்கும் பொழுது கூடுதலாக தண்ணீர் அல்லது உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குடைமிளகாய் சட்னி தயார். குடைமிளகாய் சட்னி சூடான இட்லி, தோசை இவற்றிற்கு மட்டுமில்லாமல் சூடான சாதத்துடனும் வைத்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.