விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக கிருஷ்ண ஜெயந்தி முடிந்த நிலையில் அடுத்த சில நாட்களில் முழு முதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்திக்கு நம்ம வீட்டு விநாயகருக்கு பிடித்த இனிப்பு வகைகள் செய்து அருமையாக கடவுளை வணங்கலாம் வாங்க. சிலோன் ஸ்பெஷல் பெட்டி கொழுக்கட்டை செய்வதற்கான ரெசிபி இதோ..
இந்த கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் பூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக இரண்டு கப் தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் புதிதாக இருக்கும் பொழுது அதன் பூ சுவையாகவும் கொழுக்கட்டை சிறப்பாகவும் இருக்கும். அந்த வகையில் புதிய தேங்காயிலிருந்து கிடைத்த இரண்டு கப் தேங்காய் துருவல், இனிப்பிற்காக முக்கால் கப் வெல்லம், ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் என தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து உருகியதும் இரண்டு கப் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். தேங்காய் நன்கு வறுபட்டு வாசனை வந்ததும் முக்கால் கப் வெல்லம் சேர்த்து நன்கு கிளற வேண்டும். வெல்லம் நன்கு உறுகி தேங்காய் உடன் ஒரு சேரும் விதத்தில் நன்கு கிளற வேண்டும்.
இந்த நேரத்தில் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், பத்து முதல் 15 முந்திரிப் பருப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம். வெல்லம் நன்கு உருகி தேங்காயுடன் கெட்டியாக இணைந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது பூரணம் தயாராக உள்ளது.
இதற்கு முதலில் கொழுக்கட்டை செய்வதற்கான மாவு தயார் செய்து கொள்ளலாம். அதற்காக அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நல்ல கொதிக்க தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து கொள்ள வேண்டும்.
தண்ணீர் கொதிக்க கொதிக்க சேர்த்து பிசையும் பொழுது மட்டுமே கொழுக்கட்டை மிருதுவாக இருக்கும். மேலும் கொழுக்கட்டை மிருதுவாக இருக்க பிசையும் பொழுது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மாவும் தயாராக உள்ளது. இதை இடியாப்ப குழலில் சேர்த்து இடியாப்பம் போல பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் நடுவே நாம் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து ஒரு சேர மூடிக்கொள்ள வேண்டும்.
இப்படி நாம் தயார் செய்து வைத்திருக்கும் அனைத்து பூரணத்திற்கும் இடியாப்பம் செய்து பூரணம் உள்ளே வைத்து மூடிக்கொள்ளலாம். இதை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து முதல் 15 நிமிடம் நல்ல வேக வைத்து இறக்கினால் சிலோன் ஸ்பெஷல் கொழுக்கட்டை தயார்.