வீட்டில் பெரிதாக காய்கறிகள் இல்லாத சமயங்களிலும் குழந்தைகளுக்கு விதவிதமான சமையல் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற கட்டாயம் அனைவருக்கும் இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் எளிமையாக கிடைக்கும் கொத்தமல்லி வைத்து அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ…
முதலில் இரண்டு கப் பாஸ்மதி அரிசியை தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அரிசியை ஊற வைத்தால் சாதம் பதமாக கிடைக்கும்.
அரை மணி நேரம் கழித்து அகலமான குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும். இதில் பட்டை சிறிய துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பிரியாணி இலை ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் மூன்று தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் அடுத்த மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து நன்கு விழுதுகளாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை குக்கரின் சேர்த்துக் கொள்ளலாம். கொத்தமல்லி விழுது சேர்த்த பிறகு 2 நிமிடம் வரை மிதமான தீயில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
முதுகெலும்புகளை பலப்படுத்தும் புரோட்டின் சத்து அதிகமாக நிறைந்த உளுந்தம் பால்… ரெசிபி இதோ!
அதன் பிறகு தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நம் ஊற வைத்திருக்கும் இரண்டு கப் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு கப் அரிசிக்கு மூன்று கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடிவிட வேண்டும். இரண்டு விசில்கள் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது சுவையான மற்றும் எளிமையான முறையில் கொத்தமல்லி சாதம் தயார். இந்த சாதத்திற்கு அப்பளம், உருளைக்கிழங்கு வருவல் என வைத்து கொடுக்கும் பொழுது சிறப்பாக இருக்கும்.