அட! அடுப்பே இல்லாமல் செய்யும் கொங்கு நாட்டு ஸ்பெஷல் பச்ச புளி ரசம்…!

கொங்கு நாட்டு பகுதிகளில் திருமணம் திருவிழா போன்ற எந்த விசேஷம் என்றாலும் கறி விருந்து இருந்தால் கட்டாயம் அங்கு பச்ச புளி ரசம் இடம் பிடித்து விடும். இந்த ரசத்தின் சிறப்பே அடுப்பே இல்லாமல் செய்யும் ரசம் ஆகும். அசைவ உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு உணவு எளிதில் செரிமானமாகும் வகையில் இந்த ரசம் செய்யப்படுகிறது.

மிளகு, பூண்டு ஆகியவை சேர்க்காமல் சீரகத்தை கைகளால் கசக்கி சேர்த்து செய்யும் இந்த ரசம் அத்தனை சுவையாக இருக்கும். இதனை மிக்ஸி கொண்டு இடித்து செய்வது கூடாது. கைகளாலேயே கரைத்து செய்ய வேண்டும். வாருங்கள் இந்த பச்ச புளி ரசத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

எலுமிச்சை பழ அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். புளி நன்கு ஊறிய பிறகு இதனை கைகளால் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியில் தூசிகள், ஓடு, மண் ஏதாவது இருக்கலாம் எனவே இதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இரண்டு தக்காளி பழங்களை துண்டுகளாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நன்கு பழுத்த பழங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த ரசத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

50 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயத்தை நன்கு பொடி பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு கொத்து கறிவேப்பிலை மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி விடவும்.

இறுதியாக ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தை கைகளில் கசக்கி இதில் சேர்க்க வேண்டும். கைகளில் கசக்கும் பொழுதே இதிலிருந்து நல்ல மனம் வரும். இடிக்கும் உரல் அல்லது மிக்ஸியில் இடித்து சேர்க்காமல் கைகளால் கசக்கி சேர்த்தால் தான் இந்த ரசத்தின் உண்மையான சுவை கிடைக்கும்.

இப்பொழுது இதனை கைகளால் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தும் கரைந்து விட வேண்டும். அந்த அளவிற்கு கரைக்க வேண்டும். அவ்வளவுதான் அடுப்பே இல்லாமல் எண்ணெய் இல்லாமல் அருமையான பச்ச புளி ரசம் தயார்.