கமகமக்கும் சத்தான கொண்டை கடலை குழம்பு இப்படி மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க…!

கொண்டைக்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு உணவுப்பொருள் ஆகும். கொண்டைக்கடலையை வைத்து பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். கடலைக்கறி, சென்னா மசாலா, கொண்டைக்கடலை பிரியாணி என ஏராளமான ரெசிபிக்கள் செய்ய முடியும். கொண்டைக்கடலை வைத்து செய்யும் ரெசிபிக்கள் சுவையாக இருப்பதோடு உடலுக்கும் நன்மை தரக்கூடியது. இந்த கொண்டை கடலையை வைத்து எப்படி சுவையான குழம்பு செய்யலாம் என்பதை பார்ப்போம். இதில் மசாலாக்கள் வறுத்து அரைத்து செய்வதால் குழம்பு மணம், சுவை என அனைத்திலும் அட்டகாசமாக இருக்கும்.

ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை வைத்து சூப்பரான சத்தான சன்னா மசாலா கிரேவி…!

கொண்டைக்கடலை குழம்பு செய்வதற்கு 200 கிராம் கருப்பு கொண்டை கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும். கொண்டைக்கடலை நன்கு ஊறிய பிறகு இதனை குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து விட வேண்டும். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிலான புளியை ஊறவைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் அளவிற்கு முழு கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் வெந்தயம், ஆறு வர மிளகாய், 4 காஷ்மீரி மிளகாய் இவற்றோடு சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டு மேஜை கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். வறுத்த இந்த மசாலாக்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஓரளவு அரைத்துக் கொள்ளவும்.

பாட்டி கை பக்குவத்தில் செய்தது போன்ற சுவையில் மொச்சைக் கொட்டை காரக்குழம்பு!

இப்பொழுது ஒரு கடாயில் 200 கிராம் அளவிற்கு தோல் உரைத்த சின்ன வெங்காயம் மற்றும் 10 பல் பூண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் பூண்டு ஓரளவு வதங்கிய பிறகு ஒரு பெரிய தக்காளியை நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலா உடன் இதையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது குழம்புக்கு தேவையான மசாலா தயார்.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடுகு உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும். 10 சின்ன வெங்காயம், நான்கு பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இவை நன்கு வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். பச்சை வாசனை போன பிறகு வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலையை தண்ணீரோடு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்பொழுது நீளவாக்கில் நறுக்கிய மூன்று கத்திரிக்காய், பெரிய துண்டுகளாக நறுக்கிய இரண்டு உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்க விடவும். காய்கறிகள் ஓரளவு வெந்த பிறகு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

கிராமத்து முறையில் சத்துக்கள் நிறைந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப் பயறு குழம்பு!

அவ்வளவுதான் சுவையான சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலை குழம்பு தயார்..!