உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு கொள்ளு பருப்பு வைத்து புதுமையான ரெசிபி இதோ…

உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக பலவிதமான குறைபாடுகள் ஏற்பட துவங்குகிறது. இதை தடுக்கும் விதமாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தம் உணவில் அடிக்கடி கொள்ளு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் கொள்ளு பருப்பு எடுத்துக் கொள்வதன் மூலமாக மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த வகையில் கொள்ளு பருப்பு வைத்து சற்று வித்தியாசமான மற்றும் சுமையாக ரெசிபி செய்ய விரும்புபவர்களுக்கு இந்த விளக்கம் மிகவும் உதவிகரமாக இருக்கும். வாங்க கொள்ளு ரெசிபி பார்க்கலாம்…

முதலில் ஒரு கப் கொள்ளுவை நன்கு கழுவி சுத்தம் செய்து குறைந்தது 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 5 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் சிறிதளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவு கெட்டிப் பதத்தில் இருக்கும் விதமாகவே அரைக்க வேண்டும், தண்ணியாக இருக்கக் கூடாது. இப்பொழுது அரைத்த கொள்ளுமாவை இட்லி தட்டில் சிறு சிறு உருண்டைகளாக வைத்து குறைந்தது பத்து நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து ஐந்து நிமிடம் சூடு தணிய வைக்க வேண்டும். மாவு நன்கு சூடு தணிந்ததும் சிறிது சிறிதாக உதிர்த்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை மட்டும் அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மாவு நன்கு உதிரி உதிரியாக ரவை பதத்திற்கு வந்து விடும்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய சிறிய துண்டு இஞ்சி மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

முருங்கை கீரை வைத்து சுவையான மற்றும் ஹெல்த்தியான நூடுல்ஸ் ரெசிபி!

பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது நமது விருப்பத்திற்கு ஏற்ப ஸ்வீட் கான், பட்டாணி என தேவையான காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள் நன்கு வதங்கியதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்துஇரண்டு மூன்று முறை நன்கு கலந்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் மூடி போட்டு வேகவைத்து இறக்கினால் சுவையான கொள்ளு ரெசிபி தயார். உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி கொள்ளு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுத்து நரம்பு மண்டலத்தை பாதுகாப்பாக வைக்கிறது.

இதனால் இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுத்து சத்து நிறைந்தவர்களாக மாற்றலாம்.

Exit mobile version