உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உடல் எடையின் காரணமாக அதிகம் அவதிப்படுபவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது நம் உணவில் கொள்ளு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் மூலப்பொருட்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து உடல் எடை அதிகரிப்பதிலிருந்து பாதுகாக்கிறது. கொள்ளுவில் பெரும்பாலான சத்துக்கள் இருந்தாலும் சிலர் அதை சாப்பிட மறுத்து வருகின்றனர். சுவையில்லாத கொள்ளை சாப்பிட வேண்டுமா? என நினைப்பவர்களுக்கு ஒரு முறை இந்த சுவையான கொள்ளு குழம்பு செய்து கொடுத்து பாருங்கள்.. கொள்ளு குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….
கொள்ளு குழம்பு செய்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பாகவே ஒரு கப் கொள்ளுவை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைக்க வேண்டும். அடுத்ததாக 10 மணி நேரம் கழித்து இந்த கொள்ளுவை ஒரு குக்கரில் சேர்த்து குறைந்தது 7 முதல் 10 விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.
பத்து விசில்கள் கழித்து அழுத்தம் குறைந்ததும் குக்கரை திறந்து கொள்ளுவை தொட்டுப் பார்க்கும் பொழுது கொள்ளு நன்கு வெந்திருப்பதை உணரலாம். அடுத்ததாக இந்த கொள்ளுவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைக்கும் பொழுது உள்ள நீரையும் இதனோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பு, ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதனுடன் 10 பல் வெள்ளைப்பூண்டு, 10 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
இதை அடுத்து ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களின் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது கொள்ளு குழம்பு செய்வதற்கான மசாலா தயாராக மாறியுள்ளது. அதே அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
கடுகு நன்கு பொரிந்ததும் பத்து பல் வெள்ளைப் பூண்டு, ஐந்து சின்ன வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்த விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் கொரகொர என அரைத்து வைத்திருக்கும் கொள்ளு சாறு இதில் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாவுடன் சேர்த்து கொள்ளுவை ஒருமுறை நன்கு கிளறியதும் பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
பழைய சாதம் கூட ஓகே தான்…. ஆனால் உப்புமா வேண்டவே வேண்டாம் என சொல்பவர்களுக்கு இந்த ரெசிபி!
இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரும் சேர்த்து மிதமான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் குழம்பு நன்கு கொ
திக்க வேண்டும். இறுதியாக நமக்கு இப்பொழுது சுவையான கொள்ளு குழம்பு தயார்.
கொள்ளு வாசமே இல்லாமல் இந்த குழம்பு எளிமையாக இருப்பதால் இட்லி, தோசை சப்பாத்தி சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். கொள்ளு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு கூட இந்த குழம்பு பிடித்த குழம்பாக மாறிவிடும்.