பொதுவாக கீரை உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தாராளமாக கொடுத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரை சாப்பிடுவதற்கு சற்றுமுகம் சுளிப்பது வழக்கமான ஒன்றுதான். கீரை மட்டும் வைத்து சாதத்துடன் சாப்பிடும் பொழுது சற்று சலிப்பாக தான் இருக்கும். இந்த முறை கீரையுடன் நல்ல மொறுமொறுப்பாக சேப்பங்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிடும் பொழுது சுவை கூடுதலாக மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் சிறப்பாக இருக்கும். வாங்க எளிமையான முறையில் கீரை மசியல் மற்றும் சேப்பங்கிழங்கு வறுவல் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
முதலில் நமக்கு தேவையான அரைக் கீரையை கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கைப்பிடி அளவு உரித்த வெள்ளை பூண்டு, பத்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
கீரை வேக வைக்கும் பொழுது மிதமான தீயில் வேக வைத்தால் போதுமானது. கீரை நன்கு வந்ததும் அதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு மத்து கொண்டு கடைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கீரைக்கு தாளிப்பு தயார் செய்து கொள்ளலாம்.
ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய பாதி பெரிய வெங்காயம், இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்து கீரையுடன் கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான அரைக்கீரை தயார்.
அடுத்ததாக சேப்பங்கிழங்கு வறுவலுக்கு கிழங்கு நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதன் தோள்கள் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கடலை மாவு, அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதில் நாம் வேகவைத்து நறுக்கி வைத்திருக்கும் சேப்பங்கிழங்குகளை சேர்த்து நன்கு மசாலாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு அல்லது மூன்று வெள்ளைப்பூண்டு இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நாம் மசாலாவுடன் கலந்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்குகளை சேர்த்துக் கொள்ளலாம்.
மிதமான தீயில் பொன்னிறமாக மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இதில் அரிசி மாவு கலந்திருப்பதால் சாப்பிடும் பொழுது நல்ல முறுமுறுப்பாக இருக்கும். 10 முதல் 15 நிமிடத்தில் சேப்பங்கிழங்கு வறுவல் தயாராகிவிடும். இந்த அருமையான கீரை மசியலுக்கு சேப்பங்கிழங்கு வருவல் கச்சிதமான பொருத்தமாக இருக்கும். சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது நல்ல திருப்தி கிடைக்கும்.