கீரைகளில் குழந்தைகளுக்கு தேவையான பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் குழந்தைகள் அதை விரும்பி சாப்பிடுவது இல்லை. அப்படி கீரைகள் தொடர்ந்து சாப்பிடாத போது குழந்தைகளுக்கு சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்காக இந்த முறை கீரை வைத்து அதிகப்படியாக மசாலா சேர்க்காத எளிமையான கீரை சாதம் செய்வது எப்படி என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் கப் கீரை, கால் கப் தேங்காய், கால் கப் தண்ணீர், ஒரு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி மிளகு, காய் கரண்டி மஞ்சள் தூள், முக்கால் தேக்கரண்டி உப்பு, சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி முந்திரிப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை, இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு பொரியும் வரை வருத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக வாசனைக்காக அரை தேக்கரண்டி பெருங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இதை அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்த கீரை விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
கீரை விழுது சேர்த்த பிறகு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கெட்டியாக தொக்கு பதத்திற்கு வரும்வரை இதமான தீயில் வேக வைக்க வேண்டும். கீரை விழுது கெட்டியான தொக்கு பதத்திற்கு வந்த பிறகு இரண்டு கப் சாதம் சேர்த்து கிளறி கொள்ளலாம்.
சாதம் சேர்த்து நன்கு கிளறிய பிறகு இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொள்ளலாம். இப்பொழுது சுவையான மற்றும் அருமையான கீரை சாதம் தயார். வழக்கமாக செய்யும் கீரை சாதத்தை விட இந்த சாதம் சற்று வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.