கத்திரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட அசைவத்தின் சுவையில் கத்திரிக்காய் வைத்து ரெசிபி செய்து கொடுக்கும் பொழுது சுவைக்காக மயங்கி சாப்பிட வாய்ப்புள்ளது. இந்த முறை அதற்காக கத்திரிக்காய் வைத்து எப்போதும் போல எண்ணெய் கத்திரிக்காய், கத்திரிக்காய் மசாலா என செய்யாமல் சற்று வித்தியாசமாக சிக்கனில் அதே சுவையில் பொடி கறி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை, ஐந்து காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
அடுத்து 300 கிராம் அளவுள்ள கத்திரிக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய கத்திரிக்காய் கடாயில் சேர்த்து கொள்ளலாம். கத்திரிக்காய் சேர்த்த பிறகு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கத்திரிக்காய் சேர்த்து எண்ணெயோடு இரண்டு முறை கிளற வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது கத்தரிக்காய் நன்கு மசிந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரின் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். கத்திரிக்காய் நன்கு வெந்து வரும் நேரத்தில் இந்த பொடியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
மசால் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வரை கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் பொடி கறி தயார். சூடான சாதத்துடன் இந்த கறி வைத்து சாப்பிடும் பொழுது சிக்கனில் அதே சுவையில் சாப்பிட சாப்பிட திகட்டாத வண்ணம் அருமையாக இருக்கும்.